ADDED : அக் 26, 2024 01:04 AM

ஷிவமொக்கா : கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா நகரின் சகயாத்ரி கல்லுாரி எதிரே சமீபத்தில் போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பத்ராவதி பகுதியிலிருந்து வந்த ஒரு காரை ஓரமாக நிறுத்தும்படி போலீஸ்காரர் ஒருவர் சைகை காட்டினார். ஆனால், அதை கார் டிரைவர் மதிக்காமல் முன்னேறி செல்ல முயன்றார்.
அவரை தடுப்பதற்காக காரின் முன்னே வந்து நின்ற போலீஸ்காரர், மீண்டும் ஓரம் கட்டும்படி கூறினார். ஆனாலும் தொடர்ந்து காரை முன்னால் நகர்த்தியபடி இருந்தார் டிரைவர். ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் மீது காரை மோதினார். தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீஸ்காரர், காரின் பானெட் மீது தாவி ஏறினார்.
அப்போதும் காரை நிறுத்தாமல் 100 மீட்டர் துாரத்திற்கு போலீஸ்காரரை இழுத்துச் சென்று கீழே தள்ளிவிட்டு, கார் டிரைவர் தப்பிச் சென்றார்.
கார் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் மிதுன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.