மழைநீர் ஒழுகிய அரசு பஸ்சில் குடைபிடித்து ஓட்டிய ஓட்டுநர்
மழைநீர் ஒழுகிய அரசு பஸ்சில் குடைபிடித்து ஓட்டிய ஓட்டுநர்
ADDED : மே 24, 2024 05:00 PM

குடகு : மழைநீர் ஒழுகியதால், குடகில் அரசு பஸ்சுக்குள் குடைபிடித்தபடி ஓட்டும் அவல நிலை ஓட்டுநருக்கு ஏற்பட்டது.
கர்நாடக காங்கிரஸ் அரசு, 'சக்தி' என்ற திட்டம் மூலம், அரசு பஸ்களில் பெண்களை இலவசமாக அழைத்துச் செல்கிறது. இதுவரை 200 கோடி பெண் பயணியரை அழைத்துச் சென்றதாக மார்தட்டிக் கொள்கிறது.
இதற்கிடையில், புது புது சொகுசு பஸ்களையும் அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் பஸ்களை அரசு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், குடகு மாவட்டம், மடிகேரியில் இருந்து, உத்தர கன்னடா மாவட்டம், கார்வாருக்கு சென்று கொண்டிருந்த வட மேற்கு போக்குவரத்துக் கழகத்துக்கு உட்பட்ட பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகும் அவல நிலை உள்ளது.
கன மழைக்கு இடையே இயக்கியபோது, பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகிக் கொண்டே இருந்தது. பஸ்சுக்குள் ஓட்டுநர் குடை பிடித்தபடியே, பஸ்சை இயக்கினார். வலது கையில் குடை, இடது கையில் ஸ்டேரிங் பிடித்து ஓட்டிய காட்சிகளை, ஒரு பயணி வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
ஓட்டுநர் பஸ் கியரை மாற்றுவதற்கும் குடையைப் பிடிப்பதற்கும் போராடியது, பஸ் அவலம் குறித்து பயணியரை வருத்தம் கொள்ளச் செய்தது.
கோடிணக்கணக்கான ரூபாய் லாபத்துடன், போக்குவரத்துக் கழகம் இயங்குவதாக அரசு சொல்கிறது. ஆனால், இத்தகைய அவல நிலையை சரிபடுத்த முடியவில்லை என்று பயணியர் ஆக்ரோஷம் அடைந்துள்ளனர்.
'அப்போது பஸ்சில் 20க்கும் அதிகமான பயணியர் இருந்தனர். ஒரு வேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால், எங்களின் நிலைமை என்ன ஆயிருக்கும்?' என, பயணியர் அதிருப்தி வெளிப்படுத்தினர்.