'ரூ.10,000 வழங்கியதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்த்தது'
'ரூ.10,000 வழங்கியதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்த்தது'
ADDED : நவ 15, 2025 12:16 AM

ஜெய்ப்பூர்: 'பீஹாரில் தேர்தல் சமயத்தில் பெண்களுக்கு, 10,000 ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டதை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்த்தது, இதை தான் ஓட்டு திருட்டு என்கிறோம்' என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறினார்.
பீஹாரில் மகளிர் தொழில்வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், 75 லட்சம் பெண்களுக்கு, 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 26ல் இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இந்நிலையில், பீஹார் தேர்தலில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 2020 தேர்தலை காட்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பீஹார் சட்டசபை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன், பெண்களுக்கு, 10,000 ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. இதை தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை. மவுனமாக வேடிக்கை பார்த்தது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறிய ஓட்டுத் திருட்டு இது தான். பண பலம் இந்த தேர்தலில் விளையாடி உள்ளது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருக்கலாம். ஆனால், காங்கிரசின் சித்தாந்தம் நாட்டிற்கு நன்மை பயக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

