தேர்தல் பத்திரங்கள் ரகசியம் அம்பலம்: ஒரு நாள் முன்பே ‛ரிலீஸ்'
தேர்தல் பத்திரங்கள் ரகசியம் அம்பலம்: ஒரு நாள் முன்பே ‛ரிலீஸ்'
UPDATED : மார் 15, 2024 03:11 PM
ADDED : மார் 15, 2024 01:10 AM
புதுடில்லி: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய முழு விபரங்களையும் தேர்தல் கமிஷன் நேற்றிரவு வெளியிட்டது.
'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றை வாங்கியவர்கள், அவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டன போன்ற விபரங்களை தாக்கல் செய்ய, இந்த திட்டத்தை செயல்படுத்தும் எஸ்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது.அவ்வாறு வங்கி அளிக்கும் தகவல்களை, தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி, அனைத்து தகவல்களையும் தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., வழங்கியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், '2019 ஏப்., 1ம் தேதியில் இருந்து, இந்த தேர்தல் பத்திரம் நடைமுறையில் இருந்த, கடந்த பிப்., 15ம் தேதி வரை மொத்தம், 22,217 பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
'இதில், 22,030 பத்திரங்கள், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ளன' என, வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல்கள் அனைத்தையும் இன்று மாலைக்குள் இணையதளத்தில்
வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட்டது.
இரண்டு தொகுப்புகளாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 337 பக்கங்கள் உள்ள முதல் தொகுப்பில், பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம், 426 பக்கங்கள் உள்ள இரண்டாவது தொகுப்பில், எந்தெந்த கட்சிகள், அந்தப் பத்திரங்களை பணமாக்கியுள்ளன என்ற விபரம், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
தேதி வாரியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனம் மொத்தம் எவ்வளவு வழங்கியுள்ளது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. அதுபோல, அரசியல் கட்சிகள் மொத்தமாக பெற்றுள்ள நன்கொடை தொடர்பான விபரமும் தொகுக்கப்படவில்லை.

