பாலோயர் 56 லட்சம் பேர்; ஓட்டு போட்டது வெறும் 155 பேர்; எல்லாமே பொய்யா கோப்பால்?
பாலோயர் 56 லட்சம் பேர்; ஓட்டு போட்டது வெறும் 155 பேர்; எல்லாமே பொய்யா கோப்பால்?
ADDED : நவ 23, 2024 05:33 PM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர் அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுக்களே வாங்கி தோல்வியடைந்தார்.
மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி 221 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இண்டியா கூட்டணி வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான அஜாஸ் கான், ஆஸாத் சமாஜ் கட்சியின் சார்பில் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்டார். 16 பேர் போட்டியிட்ட இந்தத் தொகுதியில், அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகளே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் வேட்பாளர் ஹரூன் கான் 65,396 ஓட்டுகளை பெற்று, 1600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.வைச் சேர்ந்த பாரதி லவேகர் 63,796 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். நோட்டாவுக்கு 1,298 ஓட்டுக்கள் விழுந்துள்ளன. இது அஜாஸ் கான் வாங்கிய ஓட்டுக்களை விட 6 மடங்கு அதிகமாகும்.
இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பாலோயர்களைக் கொண்டுள்ள அஜாஸ் கான், அது அனைத்தும் ஓட்டுக்களாக மாறும் என்று நம்பி ஏமாந்து விட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

