ADDED : அக் 26, 2024 08:02 AM

சிக்கமகளூரு: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட, 2 வயது பெண் குழந்தையை, தந்தையே மறந்து சென்றது தெரிந்தது.
சிக்கமகளூரு, கடூரின் யகடி அருகில் உள்ள சீதாபுரா ஹட்டி கிராமத்தில் வசிப்பவர் ரகு நாயக். இவர் நேற்று முன் தினம் மதியம், எண்ணெய் பிழிந்தெடுக்க தேங்காயை, கடூரின், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் அருகில் உள்ள, செக்குக்கு பைக்கில் வந்தார். தன்னுடன் இரண்டு வயது பெண் குழந்தையான மானசாவையும் அழைத்து வந்திருந்தார்.
பைக் அருகில் மகளை நிறுத்திவிட்டு, செக்கு உள்ள இடத்திற்கு சென்றார். எண்ணெயை வாங்கிவிட்டு வெளியே வந்த அவர், மகளை அழைத்து வந்ததை மறந்துவிட்டு, மது குடிக்கச் சென்றார். சிறிது நேரத்துக்கு பின், நினைவு வந்து, பைக் அருகில் சென்று பார்த்தபோது மகளை காணவில்லை. சுற்றுப்பகுதிகளில் தேடினார்.
அதன்பின் தரிகெரே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். கடையொன்றில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, குழந்தையை ஒரு பெண் அழைத்துச் செல்வது தெரிந்தது. அவர் கடத்திச் செல்வதாக நினைத்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்நிலையில் நேற்று மதியம், தரிகரே சட்னஹள்ளி கிராமத்தின் பிரகாஷ் - மேரி தம்பதி போலீஸ் நிலையத்துக்கு வந்து குழந்தையை ஒப்படைத்தனர். அவர்கள் கூறுகையில், 'தந்தையால் தனித்து விடப்பட்ட குழந்தை, அழுது கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோரை தேடினோம். அரைமணி நேரம் கடந்தும் யாரும் வராததால், குழந்தையை எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றோம். குழந்தை காணாமல் போனது குறித்து, நேற்று காலையில் நாளிதழ்களில் செய்தி வந்தது. இதை பார்த்த பின், குழந்தையை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தோம்' என்றனர்.
பின்னர் குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தையின் குடிப்பழக்கத்தால், இவ்வளவு குளறுபடிகள் நடந்தன.