போராட்டம் தான் முக்கியமா: நர்ஸை தாக்கிய பெண் நோயாளி!
போராட்டம் தான் முக்கியமா: நர்ஸை தாக்கிய பெண் நோயாளி!
ADDED : ஆக 17, 2024 01:05 PM

ஹைதராபாத்: தெலங்கானாவில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நர்ஸை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டிரைக்
கோல்கட்டாவில் இளம் டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவசரமான மருத்துவ உதவிகளை செய்தும் வருகின்றனர்.
போராட்டம்
அந்த வகையில், தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சத்நகர் பகுதியில் செயல்பட்டு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நீலம் பார்கவி என்ற பெண் நாய் கடிக்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
தாக்குதல்
நாய்க்கடிக்கு ஊசி போடும்படி அவர் கூறிய நிலையில், போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டிருந்ததால், முறையாக கையாளவில்லை என்று தெரிகிறது. இதனால், கடுப்பான நீலம் பார்கவி, பணியில் இருந்த ஆஷா எனும் நர்ஸை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், தாக்குதலும் நடத்தியுள்ளார். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. நர்ஸை தாக்கிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறிக்கை
மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 6 மணிநேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை நேற்று அறிக்கை விட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

