70 தொகுதிகளுக்கு 1,521 வேட்புமனு இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்
70 தொகுதிகளுக்கு 1,521 வேட்புமனு இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்
ADDED : ஜன 18, 2025 11:22 PM
புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் மாலை 3:00 மணிக்கு நிறைவடைந்த நிலையில், 70 தொகுதிகளிலும் 1,521 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. மனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்., 5ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 8ம் தேதியும் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கியது.
முதல் நாளில் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அடுத்த இரண்டு நாட்களும் சனி, ஞாயிறு என்பதால் அன்று மனுத்தாக்கல் இல்லை. ஜன., 13ம் தேதி - 20 பேரும், 14ம் தேதி 56 பேரும் 15ம் தேதி 256 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஜன., 16ம் தேதி 500 பேர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி நாளான நேற்று முன் தினம் 680 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் 981 வேட்பாளர்கள் 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. அரசியல் கட்சிகளில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்தோர் நாளை தங்கள் மனுவை வாபஸ் பெறுவர். வாபஸ் பெறும் நடைமுறை முடிந்தவுடன் நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
அதிக மனுக்கள்
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடில்லி தொகுதியில் அதிகபட்சமாக 29 வேட்பாளர்கள் 40 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இங்கு, பா.ஜ., சார்பில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா மற்றும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குறைவு
கஸ்தூரிபா நகர் தொகுதியில் 6 வேட்பாளர்கள் 9 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் இங்குதான் மிகக்குறைவாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மியும், காங்கிரசும், இண்டி கூட்டணியில் இருந்தாலும், டில்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன. அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சியும் டில்லி தேர்தலில் களம் இறங்கியுள்ளது.
பா.ஜ., 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளத்துக்கு புராரி தொகுதியையும், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சிக்கு தியோலி தொகுதியையும் ஒதுக்கியது.
ஆனால், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் தலைவர் சிராக் பாஸ்வான், பா.ஜ., தனக்கு வழங்கிய தியோலி தொகுதியில் பா.ஜ., நிர்வாகியையே வேட்பாளராக அறிவித்து ஆதரவு தெரிவித்து விட்டார். புராரியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சைலேந்திர குமார் போட்டியிடுகிறார்.

