14 லோக்சபா தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரம்...ஓய்ந்தது! நாளை ஓட்டுப்பதிவு காணும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம்
14 லோக்சபா தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரம்...ஓய்ந்தது! நாளை ஓட்டுப்பதிவு காணும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஏப் 25, 2024 04:06 AM

பெங்களூரு : கர்நாடகாவில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் 14 லோக்சபா தொகுதிகளில், பகிரங்க பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு காணும் இடங்களில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26, மே 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு ரூரல், உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார் - தனி, சிக்கபல்லாப்பூர் ஆகிய 14 தொகுதிகளுக்கு, நாளை தேர்தல் நடக்கிறது.
இவற்றில் மாண்டியா, ஹாசன், கோலார் - தனி ஆகிய மூன்று தொகுதிகளில் பா.ஜ., கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த., போட்டியிடுகிறது.
மற்ற 11 தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிடுகிறது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்றும் 'ரோடு ஷோ' நடத்தியும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பெண்கள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார் உட்பட, பா.ஜ., முக்கிய பிரமுகர்களும், வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்தனர்.
ம.ஜ.த., வேட்பாளர்களை ஆதரித்து, தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் பிரசாரம் செய்தனர். பா.ஜ.,வினரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., ராகுல், கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
முதல்கட்ட தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம், நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது.
அதன்பின்னர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதனால் பிரசாரம் முடிந்ததும், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், தங்கள் ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா துமகூரிலும், துணை முதல்வர் சிவகுமார் ராம்நகரிலும், முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியாவிலும், மத்திய அமைச்சர் ஷோபா பெங்களூரு யஷ்வந்த்பூரிலும், தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
முதல்வர் சித்தராமையா, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும், வடமாவட்ட தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
நாளை தேர்தல் நடக்க உள்ள 14 தொகுதிகளிலும், நேற்று மாலை மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் போட்டி போட்டு, மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 14 தொகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள், மாவட்டங்களை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். தேர்தலில் ஓட்டுப் போட மக்கள் தயாராகிவிட்டனர். குறிப்பாக முதல்முறை ஓட்டுப் போடுபவர்கள், ஆர்வமாக உள்ளனர்.

