ADDED : அக் 26, 2024 12:34 AM

போபால்: மத்திய பிரதேசத்தில் ஒரு கும்பல், கணவரை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு மனைவியை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு பலாத்கார சம்பவங்கள், மாநில அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 21ம் தேதி, ம.பி.,யின் ரேவா நகருக்கு தம்பதி சுற்றுலா வந்தனர்.
ஆளில்லாத பகுதியில் அவர்களை வழிமறித்த மூன்று பேர், கணவரை தாக்கி அருகில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டு, மனைவியை துாக்கிச் சென்று பலாத்காரம் செய்தனர்; மேலும், அதை மொபைல் போனில் படம் எடுத்து,போலீசில் புகார் அளித்தால் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டிச் சென்றனர்.
இருப்பினும் கணவர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளான அக்., 22ல், இந்துார் நகரில் அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில், ரத்தம் வழிய சாலையில் அங்கும் இங்கும் திரிந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஆட்டிசம் எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரை சிலர் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிந்தது.
உடனடியாக அப்பகுதி 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன், அப்பெண்ணை ஒரு நபர் அணுகி பேசுவது பதிவாகியிருந்தது.
அவர் அதே பகுதியைச் சேர்ந்த சோனு என்பதை கண்டறிந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது பலாத்காரம் செய்ததை சோனு ஒப்புக்கொண்டார். இதைஅடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.