ADDED : அக் 21, 2024 06:52 AM
கோட்டா : ராஜஸ்தானில் 5ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பிரம்பால் அடித்ததால், சிறுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ராம்கஞ்ச் மண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமம் சுல்மி. இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு ஆசிரியராக இருப்பவர் அப்துல் ஆசிஷ். நேற்று முன்தினம் வகுப்பில், ஆசிரியர் அப்துல் ஆசிஷ் 5ம் வகுப்பு மாணவி ஒருவரை பாயை மடித்து வைக்கும்படி கூறியுள்ளார். அந்த சிறுமி ஆசிரியர் கூறியதை கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சிறுமியை தாக்கியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சுல்மி கிராமத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் மாநில கல்வி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மதன் திலாவர் பங்கேற்றார். அப்போது அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் அபித் கான் அமைச்சரிடம் சிறுமியை ஆசிரியர் தாக்கியது தொடர்பாக புகார் மனுவை அளித்தார்.
இதையடுத்து அமைச்சர் உத்தரவின் பேரில் சிறுமி முகாமுக்கு நேரில் அழைத்து வரப்பட்டார். அப்போது ஆசிரியர் தன்னை பிரம்பால் தாக்கியது குறித்து சிறுமி அமைச்சரிடம் விளக்கமாக தெரிவித்தார்.
அமைச்சர் உத்தரவை தொடர்ந்து அப்துல் ஆசிஷ் மீது மோடக் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கு ஆளான சிறுமிக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கிடைத்தபிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.