ADDED : ஜன 17, 2024 01:26 AM

தொட்டபல்லாபூர் : காட்டி சுப்ரமண்யர் கோவில் பிரம்ம ரதோற்சவத்தின்போது, பெண்ணொருவர் ரத சக்கரத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரில் உள்ள காட்டி சுப்ரமண்யர் சுவாமி கோவில், தென் மாநிலங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய் கிழமை, சஷ்டி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
காட்டி சுப்ரமண்யர் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்ம ரதோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம் பிரம்ம ரதோற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். ரதத்தை பக்தர்கள் இழுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஒரு பெண், ரத சக்கரத்தின் அடியில் சிக்கினார்.
இதை கண்ட போலீசாரும், கோவில் ஊழியர்களும் சக்கரத்தில் இருந்து, இழுத்து அவரை காப்பாற்றினர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரத உற்சவம் சிறப்பாக நடந்து முடிந்தது.

