அர்ச்சகர்களுக்கு ஆண்டுக்கு 1,000 வீடுகள் கட்டுவதாக அரசு உறுதி
அர்ச்சகர்களுக்கு ஆண்டுக்கு 1,000 வீடுகள் கட்டுவதாக அரசு உறுதி
ADDED : செப் 25, 2024 07:38 AM

தங்கவயல் : ''கர்நாடகாவில் வீடற்ற ஏழை அர்ச்சகர்களுக்கு ஆண்டுதோறும் 1,000 வீடுகள் கட்டித்தருவதாக அரசு உறுதி அளித்துள்ளது,'' என, கர்நாடக மாநில ஹிந்து அறநிலையத்துறை தலைவர் ஸ்ரீவத்சவ் தெரிவித்தார்.
தங்கவயல் அர்ச்சகர்கள், ஆகமிகர்கள் சங்க ஆண்டு விழா, பொதுக்குழுக் கூட்டம், தங்கவயல் தாலுகா சங்கத்தலைவர் மஞ்சுநாத் தீக் ஷித் தலைமையில் நேற்று உரிகம்பேட்டையில் உள்ள சோழர் காலத்திய பழமையான பால சோமேஸ்வரர் கோவில் அரங்கில் நடந்தது.
கூட்டத்தில் பேசியவர்கள் வெளியிட்ட கருத்துகள்:
பூஜைகள்
துணைத்தலைவர் ராமா ராவ்: அர்ச்சகர்களிடம் ஒருங்கிணைப்பு தேவை. ஒற்றுமையின் அடையாளத்தைக் காட்டும் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் நம் தேவைகளை வெளிப்படுத்தி தீர்வு காண முடியும்.
சங்க பொருளாளர் சுதர்சன் ஆச்சார்: அர்ச்சகர்கள், ஆகமிகர்கள் ஆகியோருக்கு அதிக பிரச்னைகள் உள்ளன. வசதிகள் இல்லாதபோதும் கோவிலின் பூஜைகளை செய்ய சில அர்ச்சகர்கள் தவறுவதில்லை. பிரச்னைகளை தெரிவித்தால் தான் தீர்வு கிடைக்கும்.
பங்கார்பேட்டை தாலுகா தலைவர் ராமசாமி ஆச்சார்: கடவுளுக்கு அர்ச்சனை செய்பவர்களே அர்ச்சகர்கள். எதையும் மனநிறைவுடன் செய்யுங்கள். கோவிலில் பூஜைகள் செய்வதுடன் வெளியில் நடக்கிற பிற பூஜைகளில் செய்து தரவும் செல்ல வேண்டும். அப்படி சென்றால் மட்டுமே, நமது குடும்பத்தினரை கவனிக்க முடியும். ஏனென்றால் அரசு தரும் கவுரவ தொகை 5,000 ரூபாய் போதுமானதல்ல.
அர்ச்சகர்களுக்கு குடியிருக்க வீடுகள் இல்லை. நம் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை அவசியம் தேவை.
சில கோவில்களில் விளக்கு ஏற்ற கூட வழி கிடையாது. நித்ய பூஜை செய்யாமல் வாரத்திற்கு ஒரு முறை பூஜை செய்யப்படும் நிலை உள்ளது.
வயது வரம்பு
தனி மனிதராக இருந்து எதையும் சாதிக்க முடியாது. கோவில்களில், அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது 65. இதை மாற்ற வேண்டும். உடலில் சக்தி உள்ளவரை பணி தொடர வாய்ப்பு வேண்டும்.
ஸ்ரீவத்சவ் - மாநில தலைவர்: ஹிந்து அறநிலையத் துறை கோவில்களின் அர்ச்சகர்கள் சங்கம் 1972ல் துவங்கப்பட்டது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அர்ச்சனைகள் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்றிருக்கிறோம். அரசு சலுகைகள் என்னென்ன கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஹிந்து அறநிலையத் துறைக்கென உள்ள தாசில்தாரை, மாவட்ட கலெக்டர்களை அணுகலாம்.
சங்கத்துக்கு இணையதளம் ஏற்படுத்தி மற்றவர்களுக்கு உதவி செய்யலாம். வீடற்ற அர்ச்சகர்களுக்கு கோவிலின் நிலம் இருந்தால் 25க்கு 35 அடி அளவில் அரசே வீடுகள் கட்டித் தருகிறது.
கடந்த 2011 -- 12ல் 28 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இந்த சலுகைகள், ஹிந்து அறநிலையத் துறை கோவில் அர்ச்சகர்களுக்கு மட்டுமே. தனியாருக்கு அல்ல.
ஆண்டுக்கு 1,000 வீடுகள் கட்டித்தர அரசு முன்வந்துள்ளது. கர்நாடகாவில் 35,000 கோவில்கள் உள்ளன. 60,000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் உள்ளனர். அர்ச்சகர்களின் குடும்பத்தினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை அரசு வழங்குகின்றது. இதை பெற வேண்டும்.
அர்ச்சகர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குகிறது. சிறிய, பெரிய கோவில்கள் என்ற பாகுபாடு தேவை இல்லை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தலைமை வகித்த தங்கவயல் தாலுகா தலைவர் மஞ்சுநாத் தீக் ஷித், விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அனைவரின் கோரிக்கைகளையும் மனுவாக கேட்டு வாங்கினார். இதனை மாநில தலைவர் ஸ்ரீவத்சவ் இடம் வழங்கினார்.
தங்கவயல் தாலுகா ஹிந்து அறநிலையத்துறை கோவில்களின் கவுரவ தலைவர் ஷாமா ராவ், செயலர் மனோகர் தீக் ஷித், துணைத் தலைவர் ஸ்ரீகாந்த், இணைச் செயலர்கள் ரஞ்சித் ஆச்சார், ஷியாம் சுந்தர், அமைப்புச் செயலர்கள் ராமு, பிரசன்ன குமார், உறுப்பினர்கள் வெங்கடேஷ் மூர்த்தி, வெங்கட்ரமண ராவ், அஸ்வத் நாராயண ஆச்சார், சந்தன், பயாட் ராஜு ஆகியோர் பங்கேற்றனர்.
� வேத மந்திரங்கள் ஓதி, தங்கவயல் தாலுகா அர்ச்சகர்கள், ஆகமிகர்கள் சங்க ஆண்டு விழா நேற்று நடந்தது. �கூட்டத்தில் பங்கேற்ற அர்ச்சகர்கள். இடம்: பாலசோமேஸ்வரர் கோவில் அரங்கம், உரிகம்பேட்டை, தங்கவயல்.