சித்தகங்கா மடத்துக்கு ரூ.70 லட்சம் மின் கட்டணம் கடும் எதிர்ப்பால் நோட்டீசை வாபஸ் பெற்றது அரசு
சித்தகங்கா மடத்துக்கு ரூ.70 லட்சம் மின் கட்டணம் கடும் எதிர்ப்பால் நோட்டீசை வாபஸ் பெற்றது அரசு
ADDED : டிச 20, 2024 05:35 AM

துமகூரு: சித்தகங்கா மடத்துக்கு குடிநீர் வசதி செய்ததற்கான மின் கட்டணம் 70.31 லட்சம் ரூபாயை செலுத்தும்படி, கே.ஐ.ஏ.டி.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது சர்ச்சைக்கு காரணமானதால், நோட்டீசை அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
துமகூரின் சித்தகங்கா மடத்துக்கு, சமீபத்தில் கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீசில், 'கே.ஐ.ஏ.டி.பி., சார்பில் துமகூரின், ஹொன்னேனஹள்ளி ஏரியில் இருந்து, தேவராயபட்டணா ஏரி வரை, பைப்லைன் பொருத்தும் பணிகள் முடிந்துள்ளன. 2023 - 24ம் ஆண்டில் இருந்து, ஏரிக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த நீரை சித்தகங்கா மடத்தின் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
'ஏரி தண்ணீரை பயன்படுத்துவதால், மின் கட்டண பில் 70.31 லட்சம் ரூபாயை, பெஸ்காமுக்கு செலுத்த வேண்டும். தற்போது கே.ஐ.ஏ.டி.பி., பொருளாதார நெருக்கடியில் உள்ளது. எனவே கட்டணத்தை செலுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
நோட்டீசை பார்த்து, மடத்தின் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆன்மிகத்தை வளர்ப்பதுடன், சிறார்களுக்கு இலவச உணவு, தங்கும் வசதியுடன் கல்வி போதிக்கிறது. இத்தகைய மடத்துக்கு பில் தொகை கேட்டு, நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, மடாதிபதி சித்தலிங்கசுவாமி, கே.ஐ.ஏ.டி.பி.,க்கு எழுதிய கடிதம்:
தேவராயபட்டணா ஏரி நீரை, மடத்தின் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்துவதாக அளித்த அறிக்கையை, மறு பரிசீலனை செய்ய வேண்டும். குடிநீர் நோக்கத்துக்காக, இந்த ஏரியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு மையம், இன்னும் செயல்பட துவங்கவில்லை.
இம்மையம் துவங்கிய பின், மடத்தின் 10,000 மாணவர்கள், மடத்துக்கு வரும் பக்தர்கள் தண்ணீரை பயன்படுத்துவர்.
இது மட்டுமின்றி ஏரியின் சுற்றுப்புறங்களில் உள்ள தேவராயபட்டணா, மார நாயக்கனபாளையா, பசவபட்டணா, பண்டே பாளையா உட்பட மற்ற கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
மடங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பது, அரசின் கடமை. இதற்கான மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டுமே தவிர, மடங்கள் அல்ல. எனவே, மின் கட்டணம் செலுத்த முடியாது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
சித்தகங்கா மடத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தர்ம சங்கடத்துக்கு ஆளான அரசு, நோட்டீசை திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:
கே.ஐ.ஏ.டி.பி., கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் இருந்து, மடத்தினர் தண்ணீர் பெற்றுள்ளனர். சித்தகங்கா மடத்தின் சேவை குறித்து, எங்களுக்கும் தெரியும். மடத்தின் மீது எங்களுக்கு அபார கவுரவம் உள்ளது. தண்ணீரே பயன்படுத்தாமல் நோட்டீஸ் அனுப்பியிருந்தால், அதிகாரியை சஸ்பெண்ட் செய்வோம்.
வரும் நாட்களில் சித்தகங்கா மடத்துக்கு இலவச நீர் வழங்குவோம். இது தொடர்பாக கே.ஐ.ஏ.டி.பி., - சி.இ.ஓ.,விடம் பேசுவேன். சித்தகங்கா மடத்தின் சுவாமிகளிடமும் பேசுவேன். ஏரி நீரை மடம் பயன்படுத்துவதில், எந்த தவறும் இல்லை. நோட்டீசை திரும்ப பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.ஐ.ஏ.டி.பி., சார்பில் மடத்துக்கு நோட்டீஸ் வந்தது உண்மை தான். 70 லட்சம் ரூபாய் செலுத்த முடியாது என, நான் கடிதம் எழுதியுள்ளேன். பிரச்னையை சரி செய்வதாக, அரசு கூறியுள்ளது. நோட்டீஸ் விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். நோட்டீசை திரும்ப பெறுவதாக, அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
- சித்தலிங்க சுவாமிகள், மடாதிபதி.
பெரும்பாலான மடங்கள், உணவு, இருப்பிடத்துடன் கூடிய இலவச கல்வி வழங்குகிறது. மடங்களுக்கு நிதியுதவி வழங்கும் பாரம்பரியம் நம்முடையது. ஆனால், மடத்திடம் இருந்து பணம் பறிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அவலமான சூழ்நிலைக்கு, அரசு வந்துவிட்டதா. வெட்கம் இல்லையா. மடத்துக்கு நோட்டீஸ் அளித்த அதிகாரி மீது, நடவடிக்கை எடுங்கள்.
- சி.டி.ரவி, எம்.எல்.சி., - பா.ஜ.,