பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற நாடு திரும்பிய கிராண்ட் மாஸ்டர்
பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற நாடு திரும்பிய கிராண்ட் மாஸ்டர்
ADDED : செப் 26, 2024 02:09 AM
புதுடில்லி, :செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்று சாதனை படைத்த வீரர்கள், வீராங்கனையர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதற்காக, அஜர்பைஜானில் நடந்த செஸ் தொடரில் பங்கேற்க சென்ற கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி, அவசரமாக நாடு திரும்பி அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றார்.
ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், செஸ் ஒலிம்பியாட் 45வது சீசன் சமீபத்தில் நடந்தது.
தமிழக வீரர்கள் குகேஷ், ஸ்ரீநாத், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட பலர் பங்கேற்ற இந்தத் தொடரின் 11 சுற்றுகளின் முடிவில், இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணி முதலிடம் பிடித்தது. இதன் வாயிலாக, தங்கப் பதக்கங்களை முதன்முறையாக வென்று வரலாற்று சாதனையையும் படைத்தது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் சாதனைப் படைத்த இந்திய அணியினரை சந்தித்து வாழ்த்து கூற பிரதமர் மோடி முடிவு செய்தார். திடீரென இந்த சந்திப்பு முடிவு செய்யப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி, அஜர்பைஜானில் நடந்த செஸ் தொடரில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார்.
இந்திய செஸ் அணியினரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானதை அறிந்த அவர், உடனே நாடு திரும்ப முடிவு செய்தார்.
இதையடுத்து, அஜர்பைஜான் செஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தனக்கு பதிலாக கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் பங்கேற்பார் எனவும் போட்டி குழுவினரிடம் தெரிவித்தார். இதை போட்டிக்குழுவினர் ஏற்றதையடுத்து, விதித் குஜராத்தி நேற்று அவசரமாக நாடு திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, டில்லியில் பிரதமர் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்டோரும் பங்கேற்று, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.
இதில், விதித் குஜராத்தியும் அவர்களுடன் இணைந்து கொண்டார். அப்போது, தங்கம் வென்ற இந்திய செஸ் அணியினரை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடிக்கு செஸ் பலகை ஒன்றை, இந்திய செஸ் அணியினர் வழங்கினர்.
இதேபோல் பிரதமர் மோடி முன்னிலையில், பிரக்ஞானந்தாவும் - அர்ஜுன் எரிகேசி செஸ் விளையாடி அசத்தினர்.

