இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடம் பசுமை போர்த்திய வளனுார் கிராமம்
இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடம் பசுமை போர்த்திய வளனுார் கிராமம்
ADDED : டிச 26, 2024 06:50 AM

சுற்றுலா செல்வதற்கு அனைவருக்கும் பிடிக்கும். இருப்பினும் சிலர் கூட்டம் அதிகம் இல்லாத, அமைதியான சுற்றுலா தலங்களுக்கு செல்வதையே விரும்புவர். இதுபோன்று, அமைதியை விரும்புவோருக்கு ஏற்ற இடம் தான் கூர்க் வளனுார்.
குடகு மாவட்டம், கூர்க் துபாரே காடுக்கு அருகில் உள்ளது, வளனுார் எனும் கிராமம். கிராமம் முழுதும் பச்சை பசேலென காட்சி அளிக்கும் மரங்கள், செடி கொடிகள், ஆறு, வனவிலங்குகள் என பசுமையாக காட்சி அளிக்கிறது.
இக்கிராமத்தை பார்வையிடும் போது, இயற்கை தாய் தனது மடியில் வைத்து தாலாட்டுகிறாளோ என்ற எண்ணம் வருகிறது.
புதுமை உலகம்
கார்ப்பரேட் வேலை, போக்குவரத்து நெரிசல் என பரபரப்பான உலகத்தில் இருந்து காடு, யானைகள், மீன் பிடித்தல், பறவைகள் என ஒரு புதுமையான உலகிற்குள் நுழையலாம்.
ஒருபுறம் அழகான காடு, மறுபுறம் காவிரி ஆறு ஓடுகிறது. ஆற்றின் கரையோரம் பெரிய மணல் படுகைகள் உள்ளன. அதில் மணல் வீடுகளை கட்டி விளையாடலாம். பொதுவாக சுற்றுலாவின் போது, வனவிலங்குகளையே அதிகம் பார்க்க முடியும். ஆனால், இங்கு நீர்வாழ் உயிரினங்களையும் பார்க்கலாம்.
இந்தியாவில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ள சில சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று.
குடும்பத்துடன் சென்று மீன் பிடித்து மகிழலாம். மீன் பிடித்து முடித்ததும், அங்கு உள்ள ஏராளமான பறவைகளை பார்த்து ரசிக்கலாம். இங்கு வெளிநாட்டு பறவைகள், அரிய வகை பறவைகள் இருப்பதால், பொது மக்கள் சத்தம் போடாமல் இருப்பது நல்லது.
யானை சவாரி
இதையெல்லாம் ரசித்த பின், வளனுாரில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமிற்கு சென்று பார்வையிடலாம். படை வீரர்கள் போல யானைகள் அழகாக அணிவகுத்து நிற்கும் காட்சியை பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும். யானைகளின் மீது ஏறி சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
காட்டிற்குள் சென்று யானைகளை பார்ப்பதற்கு, சாகச பயணமும் உள்ளது. நண்பர்களுடன் சென்றாலும், குடும்பத்துடன் சென்றாலும் செமையான 'ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்'டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.