ADDED : ஜன 09, 2025 06:37 AM

பெங்களூரை விட்டு வெளியில் செல்லாமல், நகரத்திற்கு உள்ளே இருக்கும் ஒரு அற்புதமான சுற்றுலா தளம். 'பிக்னிக்' போக வேண்டும் என அடம் பிடிக்கும் உங்கள் வீட்டு குட்டீஸ்களை, இங்கு அழைத்துச் சென்று மகிழலாம்.
தெற்கு பெங்களூரு, பசவனகுடி பகுதியில் உள்ளது பகில் ராக் பார்க். இந்த பூங்காவின் சிறப்பம்சமே, இங்கு உள்ள பழமையான ராட்சத பாறை தான். இது 3,000 ஆண்டுகள் பழமையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கெம்பே கவுடா ஆட்சியின் போது, பாறை இருந்த இடத்தில் பெரிய அளவிலான மதில் சுவர்கள், கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டன. கண்காணிப்பு கோபுரம் இன்றும் நல்ல நிலைமையில் உள்ளது. படிக்கட்டுகளில் ஏறி, அந்த கண்காணிப்பு கோபுரத்தை பார்வையிட்டு மகிழலாம்.
பாறைகளில் ஏறி, இறங்கி சென்று மற்ற இடங்களை சுற்றி பார்க்கலாம். பூங்காவில் மலை பாறைகளுக்கு நடுவே அழகிய நீர்வீழ்ச்சி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. பூங்கா முழுதும், மரம், செடிகளால் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. நடைபயிற்சி செய்வபவருக்காக பெரிய அளவிலான நடைபாதைகள், பூங்காவை சுற்றிலும் உள்ளன. இதில் சில சிலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு ஒவ்வொரு நாளும் 750 முதல் 1,000 பேர் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலும் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, பூங்காவில் ஒரு விநாயகர் கோவிலும் உள்ளது. பாறை, பூ, மரம், செடி போன்றவைகளால் பூங்கா நிறைந்து உள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.
பூங்காவை சுற்றி அருகில் உள்ள கடைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யயப்படுகின்றன. பூங்காவை விட்டு வெளியில் வரும் போது, வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கி கொள்ளலாம். வெளியுலகம் தெரியாமல் வீட்டிலே அடைபட்டிருக்கும் உங்களது குழந்தைகளை, பகில் ராக் பார்க்கிற்கு அழைத்து சென்று மகிழ்ச்சி அடையலாம்.
எப்படி செல்வது?
பஸ்: கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் 210 என், பஸ்சில் ஏறி, நெட்டகலப்பா சதுக்கத்திற்கு செல்லலாம். அங்கிருந்து நடந்து பூங்காவிற்கு செல்லலாம்.
ரயில்: கெம்பேகவுடா மெட்ரோ நிலையத்தில் இருந்து, தேசிய கல்லுாரி மெட்ரோ நிலையத்திற்கு செல்லவும். பின், அங்கிருந்து நடந்து பூங்காவிற்கு செல்லலாம்
. - நமது நிருபர் -