ADDED : மே 13, 2025 10:10 PM

புதுடில்லி:பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும் விதமாக மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த வெற்றி பேரணியில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த பேரணியால் தேசிய தலைநகரே அதிர்ந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டன. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த வெற்றியை தந்த ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் பா.ஜ., தலைமையிலான மாநில அரசு நேற்று வெற்றி பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடமைப்பாதையில் இருந்து தேசிய போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், என்.சி.சி., அமைப்பினர், ராணுவம், துணை ராணுவம், காவல் துறையினர் பங்கேற்றனர்.
நம் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பேரணியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
பேரணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

