ADDED : அக் 25, 2024 07:51 AM
மங்களூரு: விபத்தில் காயமடைந்து, சாலையில் அவதிப்பட்டவரை, மகளிர் ஏட்டு மருத்துவமனையில் சேர்த்து, உயிரை காப்பாற்றினார்.
தட்சிண கன்னடா, மங்களூரின் கே.பி.டி., அருகில் உள்ள வியாசநகரின் திருப்பத்தில், நேற்று அதிகாலையில் டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கோழிகளை ஏற்றி சென்ற வாகனம் மீது எதிர்பாராமல் மோதியது. இதில் டிரக் கிளீனரின் முகம், கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, எந்த வாகனமும் கிடைக்காமல் அவதிப்பட்டார். அப்போது கத்ரி போலீஸ் நிலைய மகளிர் ஏட்டு முர்ஷிதா பானு, அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்றார். விபத்து நடந்திருப்பதை பார்த்து, வாகனத்தை நிறுத்தினார்.
மற்றொரு ஏட்டை வரவழைத்து, அவரது உதவியுடன் கிளீனரை, ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தார். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், கிளீனர் உயிர் பிழைத்தார். பெண் ஏட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.