ஆசிரியை கொலையில் வாலிபர் கைது பேசுவதை தவிர்த்ததால் வந்தது வெறி
ஆசிரியை கொலையில் வாலிபர் கைது பேசுவதை தவிர்த்ததால் வந்தது வெறி
ADDED : ஜன 25, 2024 05:28 AM

மாண்டியா : ஆசிரியை கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தன்னுடன் பேசுவதை தவிர்த்ததால் தீர்த்துக்கட்டியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாண்டியா மாவட்டம், பாண்டவபூர் மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் லோகேஷ், 35. இவரது மனைவி தீபிகா, 28. இந்த தம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார். மேலுகோட்டில் உள்ள தனியார் பள்ளியில், தீபிகா ஆசிரியையாக பணியாற்றினார்.
கடந்த 20ம் தேதி காலை, பள்ளிக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை. அவர் மாயமானதாக மேலுகோட் போலீசில், லோகேஷ் புகார் செய்து இருந்தார்.
நேற்று முன்தினம், மேலுகோட் யோக நரசிம்ம சுவாமி கோவிலின் மலை அடிவாரத்தில் புதைக்கப்பட்ட, தீபிகாவின் உடல், பாதி அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இரண்டு தனிப்படை
அவரை யாரோ கொலை செய்து, உடலை புதைத்தது தெரிந்தது. தீபிகா ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்ததால், அதன்மூலம் பழக்கமானவர்கள் யாராவது கொலை செய்தனரா என்ற, கோணத்திலும் விசாரணை நடந்தது.
இதற்கிடையில் மலை அடிவாரத்தில் தீபிகாவும், ஒரு வாலிபரும் சண்டை போடுவதை, கோவிலுக்கு வந்த சிலர், மொபைல் போனில் வீடியோ எடுத்து இருந்தனர்.
அந்த வீடியோவை, போலீசிடம் கொடுத்தனர். அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தீபிகாவுடன் சண்டை போட்டது, மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ், 22, என்பது தெரிந்தது.
தீபிகாவின் குடும்பத்தினரும், நிதிஷ் மீது கொலை குற்றச்சாட்டு கூறி இருந்தனர். கடைசியாக அவர் தான், தீபிகாவிடம் மொபைல் போனில் பேசியதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க, இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணியளவில், விஜயநகரா ஹொஸ்பேட்டில் நிதிஷை, மேலுகோட் போலீசார் கைது செய்தனர். முதலில் தீபிகாவை கொல்லவில்லை என்று கூறியவர், பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தீபிகாவும், நிதிஷும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் அக்கா, தம்பி போன்று பழகி வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில், ஏதாவது தவறான உறவு இருக்கலாம் என்று, குடும்பத்தினர் சந்தேகித்தனர்.
நிதிஷுடன் பேசுவதைத் தவிர்க்கும்படி, தீபிகாவுக்கு அறிவுரை கூறினர். இதனால் நிதிஷுடன் பேசுவதை, அவர் தவிர்த்தார்.
தன்னுடன் பேசும்படி, நிதிஷ் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு சம்மதிக்காததால் தீபிகாவை, கொலை செய்ய முடிவு செய்தார்.
கடந்த 20ம் தேதி நிதிஷுக்கு பிறந்தநாள். தீபிகாவிடம் மொபைல் போனில் பேசியவர், 'உங்களை பார்க்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.
பிறந்தநாள் என்பதால் நிதிஷுக்கு சட்டை எடுத்துக் கொண்டு, அவரை சந்திக்க, யோக நரசிம்ம சுவாமி கோவில், மலை அடிவாரத்திற்கு தீபிகா சென்றுள்ளார். அங்கு வைத்து நிதிஷுக்கும், தீபிகாவுக்கும் இடையில், தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நிதிஷ், தீபிகா கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில், புதைத்துவிட்டு தப்பி உள்ளார்.
நாடகம்
தீபிகாவை காணவில்லை என்று கணவரும், பெற்றோரும் தேடியபோது, தீபிகாவின் தந்தைக்கு, நிதிஷ் அடிக்கடி போன் செய்து, 'அக்கா வந்து விட்டாரா?' என்று கேட்டு, நாடகம் ஆடியதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.