அசாமில் ரயில் மோதி 7 யானைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு
அசாமில் ரயில் மோதி 7 யானைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு
ADDED : டிச 21, 2025 05:02 PM

புதுடில்லி: அசாமில் ரயில் மோதி யானைகள் இறப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது. ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள யானை கூட்டங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
அசாமில், யானை கூட்டத்தின் மீது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஏழு யானைகள் உயிரிழந்தன. இந்த விபத்தில் ரயிலின் இன்ஜின் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டன. விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்கவும், பனிக்காலங்களில் வனவிலங்கு பாதைகளை மேலும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் வனத்துறைக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டார்.
இந்த விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் புரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. ரயில் மோதி யானைகள் இறப்புக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களில் யானைகளின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். இது குறித்து மேலும் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:
இது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில வனத்துறைகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு உடன் பணியாற்ற ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வனவிலங்குகள் ரயிலில் மோதல்களைத் தவிர்க்க, லோகோ பைலட்டுகளுக்கும், வன அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. இவ்வாறு பூபேந்தர் யாதவ் கூறினார்.

