சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள்; முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி ‛‛போயே போச்சு''
சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள்; முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி ‛‛போயே போச்சு''
ADDED : நவ 04, 2024 12:17 PM

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று (நவ.,4) கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.,4) வர்த்தகம் துவங்கியதில் இருந்தே கடுமையான சரிவைக் கண்டன. நாளை நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளுக்கு முன்னதாக முதலீட்டாளர்களின் எச்சரிக்கை தீவிரமடைந்துள்ளதால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் காலை 11:53 அளவில் 1,322.40 புள்ளிகள் சரிந்து 78,401.72 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 378.05 புள்ளிகள் சரிந்து 23,926.30 ஆகவும் வர்த்தகமாகின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், சன் பார்மா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முக்கிய பங்குகள் பின்னடைவை சந்தித்தன. இருப்பினும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில பங்குகள் லாபத்தை கண்டன.
பங்குச்சந்தைகளின் இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.