UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 07:13 PM

திருடிய ஆசாமியை
சிக்க வைத்த கண்ணாடி
கனடாவின் குக்ஸ்டவுனிலுள்ள கண்ணாடி ஷோரூமுக்கு சென்ற வாலிபர், ‘ரே---–பான் மெட்டா’ ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்து பார்ப்பதாக கூறினார். அணிந்து பார்த்தவர், தான் கொண்டு வந்திருந்த போலி கண்ணாடியை கொடுத்து விட்டு, ஒரிஜினல் ஸ்மார்ட் கண்ணாடியுடன், ‘எஸ்கேப்’ ஆகி விட்டார். இந்த நுாதன திருட்டு, ஷோரூம் ஊழியர்களுக்கு சிறிது நேரத்துக்கு பிறகே தெரிய வந்தது. அணிந்து பார்த்த போது திருடன் தவறுதலாக கண்ணாடியின் வீடியோ பதிவு செயல்பாட்டை இயக்கி இருந்தான்; இதனால் அவனது தெளிவான படம், கண்ணாடியுடன் இணைத்திருந்த சாதனத்தில் பதிவாகியிருந்தது. அந்த படத்தை வைத்து, அவனை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இரவில் சுற்றிய பெண்கள்
போலீஸ் செயலுக்கு பாராட்டு
மஹாராஷ்டிராவின் மும்பை மாநகரில், நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அரைகுறை ஆடையில் இருந்த பெண்கள் இருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த ரோந்து போலீசார், சந்தேகத்தில் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அந்த பெண்கள், ‘தாங்கள் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்’ என்றனர். எங்கே தங்கியுள்ளனர், இந்த நேரத்தில் தெருவில் என்ன செய்கின்றனர் என, போலீசார் விசாரித்தனர். தாங்கள் இன்புளூயன்ஸர்கள் என்றும், சோஷியல் மீடியாவுக்காக வீடியோ எடுப்பதாகவும் அவர்கள் கூறியதும், ‘நீங்கள் படம் பிடிக்கும் வரை நாங்கள் இருந்து கண்காணிப்போம்’ என, போலீசார் கூறினர். போலீசாரை பாராட்டிய வலைதளவாசிகள், இரவு நேரத்தில் தன்னந்தனியாக சுற்றிய பெண்களை விமர்சித்தனர்.
அந்தரத்தில் கேக் வெட்டி
பிறந்த நாள் கொண்டாட்டம்
ஹிமாச்சல பிரதேசத்தின் பிர் பில்லிங்கில், பாராகிளைடிங்கில் பறந்து கொண்டே பிறந்த நாள் கேக் வெட்டிய பெண்ணின் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. பயிற்றுநருடன் அந்த பெண் பாரா கிளைடிங் செய்கிறார். பயிற்றுநர், ‘மேடம் இப்போது கேக் வெட்டப் போகிறார்’ எனக் கூறியதும், அந்த பெண் கேக் வெட்டி, தனக்குத் தானே பிறந்த நாள் வாழ்த்து பாடலையும் பாடினார். வீடியோவை பார்த்த வலைதளவாசிகள், ‘இதெல்லாம் தேவையா’ என்றும், ‘அந்தரத்தில் கேக் வெட்டுவது ரொம்ப அவசியமா’ என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
கார் டெலிவரி சுய சேவை
இந்திய பெண்ணுக்கு அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் புதிய, ‘டெஸ்லா’ கார் வாங்கச் சென்ற இந்திய வம்சாவளி பெண் கிம்மி சோஹல், அந்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். ‘கார் பிரீமியம், டெலிவரி சுய சேவை, நாங்களே காபி போட்டோம், நாங்களே செட்டிங்ஸ் செய்தோம், நாங்களே புகைப்படம் எடுத்தோம்’ என்கிறார், அவர். இந்தியாவில் கார் வாங்கச் செல்பவரை நிற்க வைத்து, ரிப்பன் வெட்டுவது, போட்டோ எடுப்பதெல்லாம் நடக்கும். அதை எதிர்பார்த்திருந்த தம்பதி, அப்படி நடக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். சர்வீஸ் முடிந்த காரை பெறுவதுபோல் இருந்ததாக கூறிய கிம்மி, ‘வாடிக்கையாளர் கார் வாங்குகிறார், அமேசான் பார்சலை அல்ல’ என, ‘டெஸ்லா’ உரிமையாளர் எலான் மஸ்க்கை, ‘டேக்’ செய்து பதிவிட்டார்.
மெட்ரோவில் அநாகரிக ‘ரீல்ஸ்’
முகம் சுளிக்க வைத்த ஜோடி
டில்லி மெட்ரோ ரயில் பெட்டிகளிலும் நிலையங்களிலும், ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ரீல்ஸ் எடுப்பது நின்றபாடில்லை; மெட்ரோவில் படம் பிடிக்கப்பட்ட ஒரு தம்பதியின் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. நெரிசலான பெட்டியில் நின்ற அந்தத் தம்பதியின் வீடியோ இயல்பாகத் தொடங்கியது. ஆனால், யாரோ தள்ளியதுபோல் நடித்த ஆண், அருகிலிருந்த பெண்ணின் மீது மிக நெருக்கமாக சாய்ந்தார். இந்த காட்சியை, மற்ற பயணியர் குழப்பத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்ப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதை கண்ட வலைதளவாசிகள், ‘இது, மெட்ரோவில் அன்றாடம் நடப்பது தான்’ என்றும், ‘அநாகரிகம்’ என்றும் கருத்து பதிவிட்டனர்.
