பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் விசாரணை... சூடுபிடித்தது! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது சி.பி.ஐ.,
பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் விசாரணை... சூடுபிடித்தது! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது சி.பி.ஐ.,
UPDATED : ஆக 24, 2024 03:14 AM
ADDED : ஆக 24, 2024 02:20 AM

புதுடில்லி :மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை சூடுபிடித்துள்ளது. பலாத்காரம் நடந்த மருத்துவனை கருத்தரங்க கூடத்தின் தாழ்ப்பாள் உடைந்திருந்தது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ., அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் டாக்டரின் உடல், கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், அங்குள்ள போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
கேள்வி
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் கருத்தரங்கக் கூடத்தின் கதவின் தாழ்ப்பாள் உடைந்திருந்தது குறித்து அவர்கள் நேற்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து சி.பி.ஐ., மூத்த அதிகாரி கூறியதாவது:
பலாத்கார சம்பவத்தை முன்னரே திட்டமிட்டு நிறைவேற்றும் நோக்கத்தில், கருத்தரங்கக் கூடத்தின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டதா? ஏற்கனவே இந்த கதவின் தாழ்ப்பாள் உடைந்திருந்ததாக சக டாக்டர்கள் கூறியுள்ள நிலையில், பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது, அறையின் வாசலில் காவலுக்கு வேறு யாராவது நிற்க வைக்கப்பட்டார்களா?
அப்படியானால், இந்த சம்பவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனரா? கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் வெளியில் கேட்காதது ஏன்? இதுபோன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதால், மருத்துவமனையில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, அங்குள்ள டாக்டர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு
இதற்கிடையே, பயிற்சி டாக்டர்களின் தொடர் போராட்டங்களால் மேற்கு வங்கத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் கடுமையாக நேற்றும் பாதிக்கப்பட்டன.
கடந்த 15 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தைத் தொடர்ந்து அவசர சிகிச்சை உட்பட பல்வேறு பிரிவுகளில் சீனியர் டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.
பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காமல் பணிக்கு திரும்பப் போவதில்லை என பயிற்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.