பாகிஸ்தான் ஆதரவு கோஷம் விவகாரம் அரசின் தடயவியல் ஆய்விலும் உறுதி
பாகிஸ்தான் ஆதரவு கோஷம் விவகாரம் அரசின் தடயவியல் ஆய்விலும் உறுதி
ADDED : மார் 06, 2024 04:40 AM

பெங்களூரு : ''உள்துறையின் அதிகாரபூர்வ தடயவியல் ஆய்வறிக்கையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போட்டது உறுதியாகி உள்ளதால், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டது தொடர்பாக, இல்தாஜ், முனாவர், முகமது ஷபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று வரை விதான் சவுதா போலீஸ் நிலைய கஸ்டடியில் இருக்கின்றனர்.
இது குறித்து, துணை முதல்வர் பரமேஸ்வர் பெங்களூரில் நேற்று கூறியதாவது:
தடயவியல் ஆய்வறிக்கை வந்த பின், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் பதில் அளித்தேன். தற்போது, உள்துறையின் அதிகாரபூர்வ தடயவியல் ஆய்வறிக்கையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போட்டது உறுதியாகி உள்ளதால், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை நடத்தி வருகிறோம். கிடைக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிறுவனத்தின் தடயவியல் ஆய்வறிக்கையை, அதிகாரபூர்வமானது என்று அரசு ஏற்காது.
ஆதாரமின்றி யாரையும் கைது செய்ய முடியாது. தற்போது ஆதாரம் கிடைத்துள்ளதால் கைது செய்துள்ளோம். எதிர்க்கட்சியினருக்கு வேறு பணியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், சையத் நாசிர் உசேன், ராஜ்யபா எம்.பி.,யாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கடிதம் எழுதுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட இல்தாஜ், காங்கிரஸ் எம்.பி., ராகுலை கட்டி தழுவிய படத்தை, பெங்., தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா முகநுாலில் வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும், காங்கிரஸ் தொண்டர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேசதுரோக செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் தலையிட மாட்டோம், முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
- சிவகுமார்,
துணை முதல்வர்

