மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: அமெரிக்கா, ஆஸி., ஜப்பான் சட்டத்தை மேற்கோள் காட்டிய 414 பக்க தீர்ப்பு!
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: அமெரிக்கா, ஆஸி., ஜப்பான் சட்டத்தை மேற்கோள் காட்டிய 414 பக்க தீர்ப்பு!
UPDATED : ஏப் 12, 2025 04:59 PM
ADDED : ஏப் 12, 2025 12:43 PM

புதுடில்லி: சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், பல்வேறு உலக நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விரிவாக அலசி ஆராய்ந்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. 414 பக்கம் கொண்ட தீர்ப்பின் நகல் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்தது, ஜனாதிபதிக்கு அனுப்பிய விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரித்த கோர்ட், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.தமிழக கவர்னர், நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருந்து, ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், கவர்னருக்கு வீட்டோ அதிகாரம் என்று எதுவும் இல்லை என்றும், இரண்டாம் முறை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர, கவர்னருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் முழு விவரமும் தற்போது சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், பல்வேறு சட்ட அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வரலாற்றுப்பின்னணி என்ற தலைப்பில் சில தகவல்கள் தீர்ப்பில் உள்ளன. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் (1935ம் ஆண்டு) ஒரு பகுதியில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, முன்பு தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1966ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1971ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ராஜமன்னார் ஆணையம், சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பார்லி அல்லது சட்டசபையில் நிறைவேறும் சட்ட மசோதாவுக்கு அரசின் தலைவர் ஒப்புதல் அளிப்பது தொடர்பான விவகாரம் சர்வதேச அளவில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது தொடர்பாகவும் நீதிபதிகள் ஆராய்ந்துள்ளனர். அதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலையின் அரசியல் சட்டப்பிரிவு பேராசிரியர் நிக்கோலஸ் பார்பர் கருத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
பிரிட்டனில் மசோதா எவ்வாறு சட்டமாகிறது என்ற நடைமுறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்லி அவைகளில் நிறைவேறிய மசோதா, மன்னரின் ஒப்புதலுக்கு அளிக்கப்படுகிறது. 1707க்கு பிறகு இதுவரை எந்த ஒரு மசோதாவும், பிரிட்டன் மன்னரால், ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதில்லை.
கனடா உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பும் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, பிஜி, சாலமன் தீவுகள், பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசியல் சட்டத்தில் இருக்கும் நடைமுறைகளை மேற்கோள் காட்டி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதலாவது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தொடர்புடைய நிகழ்வு ஒன்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து நடைமுறை சட்ட மசோதாவில் சிலவற்றை ஏற்காத ராஜேந்திர பிரசாத், அதற்கான ஒப்புதலை அளிக்காமல் நிறுத்தி வைக்க விரும்பினார்.
அது தொடர்பாக, அப்போதைய அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டார். அட்டர்னி ஜெனரல் செடல்வாட், 'இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதி என்பவர், மந்திரி சபையின் ஆலோசனைப்படி மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மாறாக செயல்பட அவருக்கென்று பிரத்யேக அதிகாரம் என்று எதுவும் கிடையாது' என்று கருத்து தெரிவித்தார்.
அதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இதனால் அப்போதைய பிரதமர் மற்றும் ஜனாதிபதி இடையில் உருவாக இருந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நலன் கருதி, கவர்னரும், மாநில அரசும் ஒன்றுக்கொன்று இணக்கத்துடன் செயல்பட வேண்டும்.
* எனவே, கவர்னர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவு எடுக்க வேண்டும்.
* ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும், கவர்னர்களின் முதன்மை செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு முழுவதும் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.