பெண்ணை கொன்ற கொலையாளி 1,582 கி.மீ., ஸ்கூட்டரில் பயணம்
பெண்ணை கொன்ற கொலையாளி 1,582 கி.மீ., ஸ்கூட்டரில் பயணம்
ADDED : செப் 28, 2024 07:22 AM

வயாலிகாவல் : பெண்ணை கொலை செய்து, உடலை 59 துண்டுகளாக வெட்டிய வழக்கில், தற்கொலை செய்த கொலையாளி, பெங்களூரில் இருந்து ஒடிசாவுக்கு 1,582 கி.மீ., ஸ்கூட்டரில் பயணம் செய்துள்ளது தெரியவந்தது.
பெங்களூரு வயாலிகாவல் விநாயகா நகரில் வசித்தவர் மஹாலட்சுமி, 29. இவரது உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில், பிரிஜ்ஜில் இருந்து கடந்த 21ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. யாரோ அவரை கொடூரமாக கொன்றது தெரிந்தது. வயாலிகாவல் போலீசார் விசாரித்தனர்.
மஹாலட்சுமியை கொலை செய்தது, ஒடிசாவின் பத்ராக் துசிரியின் முக்தி ரஞ்சன் ராய், 31, என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய தனிப்படை போலீசார், ஒடிசா சென்றனர். அதற்குள் அவர், 25ம் தேதி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனிப்பட்ட பிரச்னைகளுக்காக ஏற்பட்ட தகராறில், மஹாலட்சுமியை கொன்றது பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
மஹாலட்சுமியும், முக்தி ரஞ்சன் ராயும் நெருங்கி பழகினர். திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால், கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
மஹாலட்சுமியை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி பிரிஜ்ஜில் வைத்த பின், ஹெப்பகோடியில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு, முக்தி ரஞ்சன் ராய் சென்று உள்ளார்.
நடந்த சம்பவத்தை சகோதரரிடம் கூறிவிட்டு, அவரை ஸ்கூட்டரை எடுத்து கொண்டு புறப்பட்டு உள்ளார். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை கடந்து ஒடிசா, துசிரிக்கு ஸ்கூட்டரிலேயே சென்று உள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். பின், மேற்கு வங்கம் சென்ற அவர், அங்கிருந்து திரும்பி வந்து உள்ளார். போலீசார், தன்னை கைது செய்து விடுவர் என்ற பயத்தில், தற்கொலை செய்து இருக்கிறார். ஹெப்பகோடியில் இருந்து துசிரி 1,582 கி.மீ., துாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.