நாட்டை ஆள வாரிசு இல்லாததால் குழந்தை வரம் வேண்டி குளம் வெட்டிய மன்னர்
நாட்டை ஆள வாரிசு இல்லாததால் குழந்தை வரம் வேண்டி குளம் வெட்டிய மன்னர்
ADDED : பிப் 17, 2024 11:03 PM

வரலாற்றில் எத்தனையோ அற்புதங்கள், அதிசயங்கள் உள்ளிட்டவை நமக்கு தெரியாமலேயே காணாமல் போகின்றன. 1600 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னராட்சி காலத்தில் இருந்த குளங்கள் இப்போதும், வரலாற்று சிறப்புகளுக்கு சாட்சியாக அமைந்துள்ளன.
வரலாறு நமக்கென, பல்வேறு சிறப்புகளை வைத்துள்ளது. கர்நாடகாவிலும் இத்தகைய சிறப்புகள் ஏராளம். நமது கவனத்துக்கு வராமலேயே, அழிந்து போன வரலாற்று அடையாளங்களும் உள்ளன.
பெருமை
ஆனால் மாண்டியாவில், மன்னராட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்கள், வரலாற்றின் பெருமையை, அன்றைய மன்னர்களின் ஆளுமை திறனுக்கு சான்றாக அமைந்துள்ளன. மாண்டியா பகுதியை இந்திர வர்மன் என்ற மன்னர், 1600 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தார்.
இவர் வெட்டிய குளம், தற்போது மை ஷுகர் சர்க்கரை ஆலை உள்ள இடத்தின் அருகில் உள்ளது. இதில் உள்ள தண்ணீர், இப்போதும் சுத்தமாக உள்ளது.
இது தவிர ஹரளே சத்திரத்தின் உட்புறம் உட்பட, மேலும் இரண்டு இடங்களில் குளங்கள் அமைத்தார். இரண்டுமே மாண்டியா நகரின் மத்தியில் உள்ளன.
குளங்கள் அமைத்ததன் பின்னணியில், ஒரு கதை உள்ளது. இந்திர வர்மன் மன்னருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும், குழந்தை பிறக்கவில்லை.
தனக்கு பின் நாட்டை ஆள, வாரிசு இல்லையே என, வருந்திய அவர் குழந்தை வரம் வேண்டி, லட்சுமி ஜனார்த்தன சுவாமியை பூஜித்தார்.
அப்போது ஆஸ்தான ஜோதிடர் ஒருவர், கடவுளை வேண்டி மூன்று குளங்களை அமைக்கும்படி ஆலோசனை கூறினார். அதன்படி இந்திர வர்மன் செய்தார்.
இவர் வெட்டிய மூன்று குளங்கள், இன்றைக்கும் பழைய பொலிவுடன் பாதுகாப்பது மகிழ்ச்சியான விஷயம்.
புராதன மண்டபம்
மை ஷுகர் சர்க்கரை ஆலை பக்கத்தில் உள்ள குளத்தை ஒட்டி, புராதன மண்டபம் இருப்பதை காணலாம்.
அன்றைய காலத்தில், இந்த குளத்தில் யானைகளை குளிப்பாட்டினர். எனவே இக்குளம் 'கஜேந்திர மோக்ஷ குளம்' என, அழைக்கப்படுகிறது.
உள்ளாட்சியின் அக்கறையால், மூன்று குளங்கள் சிறப்பை தக்கவைத்துள்ளன. இத்தகைய அற்புதமான குளங்கள் இருப்பதே, பலருக்கும் தெரியாது.