ADDED : பிப் 05, 2025 02:13 AM

மஹா கும்ப நகர்:உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், திரிவேணி சங்கமத்தில் நேற்று புனித நீராடினார்.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மஹா கும்பமேளா நிகழ்வு, ஜன., 13ல் துவங்கியது.
வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
நம் அண்டை நாடான பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், 44, மஹா கும்பமேளாவில் பங்கேற்க, உ.பி.,யின் லக்னோவுக்கு நேற்று முன்தினம் வந்தார்.
பின்பு அவர், மஹா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று வந்தார்.
திரிவேணி சங்கமத்தில், யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் புனித நீராடினார்.
அப்போது அவர், காவி நிற குர்தா மற்றும் பைஜமா அணிந்திருந்தார். தொடர்ந்து, பிரயாக்ராஜில் உள்ள அக் ஷயவத் மற்றும் படே ஹனுமான் கோவில்களுக்கு சென்று பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் வழிபட்டார்.