நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
UPDATED : நவ 08, 2025 10:12 PM
ADDED : நவ 08, 2025 10:10 PM

புதுடில்லி: நீதியின் வெளிச்சம் இந்த நாட்டின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார்.
சுப்ரீம் கோர்ட்டில், சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது: நீதி என்பது ஒரு சிலரின் சலுகை அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனின் உரிமை.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் என்ற வகையில் நமது பங்கு, சமூகத்தின் ஓரங்களில் நிற்கும் கடைசி நபரைக் கூட நீதியின் வெளிச்சம் சென்றடைவதை உறுதி செய்வதாகும்.
அனைவருக்கும் சட்ட உதவி மற்றும் நீதி கிடைப்பதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதில், நீதித்துறையின் முக்கிய பொறுப்பை பிரதமரின் வருகை பிரதிபலிக்கிறது. பொருளாதாரம், ஜாதி, பாலினம், மொழி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நபரும் நீதித்துறை தனக்குச் சொந்தமானது என்று உணர வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் பேசினார்.

