ADDED : பிப் 16, 2024 07:07 AM

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மீதான, சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை, லோக் ஆயுக்தா துவக்கி உள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார், லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயாராக்குகிறார். சட்டசபை கூட்டம் முடிந்த பின், மாவட்ட சுற்றுப்பயணத்தை துவக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு, சட்டவிரோத சொத்து குவிப்பு முட்டுக்கட்டையாக நிற்கிறது.சிவகுமார் மீதான சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு, முந்தைய பா.ஜ., அரசு அனுமதி அளித்திருந்தது.
சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 90 சதவீதம் விசாரணை முடிந்து, குற்றபத்திரிகை தாக்கல் செய்த தயாரான நிலையில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் அரசு வந்தது. சிவகுமார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், இவர் மீதான வழக்கு விசாரணைக்கு, முந்தைய பா.ஜ., அரசு அளித்திருந்த அனுமதியை, சித்தராமையா அரசு ரத்து செய்தது.
இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் இருந்து, லோக் ஆயுக்தாவுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இதை பா.ஜ.,வினர் வன்மையாக கண்டித்தனர்.
இது குறித்து, கேள்வி எழுப்பி கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளது.
இதையடுத்து, சித்தராமையா அரசு உத்தரவின்படி, லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்தது. தற்போது லோக் ஆயுக்தாவினர், விசாரணையை துவக்கி உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு தயராகும் சூழலில், லோக் ஆயுக்தாவினர் விசாரணையை துவக்கியதால், சிவகுமார் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.