ரொட்டி மாவில் ‛உச்சா' கலந்து சமைத்து முதலாளியை பழிவாங்கிய வேலைக்காரி
ரொட்டி மாவில் ‛உச்சா' கலந்து சமைத்து முதலாளியை பழிவாங்கிய வேலைக்காரி
UPDATED : அக் 16, 2024 11:09 PM
ADDED : அக் 16, 2024 11:04 PM

லக்னோ: ரொட்டி மாவில் சிறுநீரை கலந்து சமைத்து கொடுத்து பழிவாங்கிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.
உ.பி. மாநிலம் காஸியாபாத் நகரைச்சேர்ந்தவர் நிதின் கவுதம், இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் ஷாந்தி நகர் காலனியைச்சேர்ந்த ரீனா 32 என்ற பெண் கடந்த எட்டு ஆண்டுகளாக வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்தும் வந்துள்ளார்.
நிதின் கவுதம் குடும்பத்தினருக்கு பல வாரங்களாக உடல் நலக்குறைவு மற்றும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்துள்ளனர். சாப்பிடும் உணவில் ஏதேனும் கலப்படம் இருந்திருக்கலாம் என மருத்துவர் கூறவே.உணவு சமைத்து தரும் வேலைக்காரி ரீனா மீது நிதின் கவுதம் மனைவி ரூபம் கவுதமிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ரீனாவின் நடவடிக்கையை கண்காணிக்க சமையலறையில் சிசிடிவி. வைத்தார் ரூபம் கவுதம் . சம்பவத்தன்று வேலைக்காரி ரீனாவின் நடவடிக்கையை சிசிடிவி.யில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வேலைக்காரி ரீனா காலை உணவிற்காக ரொட்டி மாவு பிசைய தண்ணீருக்கு பதிலாக தன் சிறுநீரை ரொட்டி மாவில் கலந்து பிசைந்து கொண்டிருந்தது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதனை கண்டு அதிர்ந்து போன ரூபா கவுதம் போலீசில் புகார் கூறினார்.
போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரீனாவை கைது செய்தனர். விசாரணையில் தன்னை அடிக்கடி முதலாளி திட்டியதால் அவரை பழிவாங்கவே ரொட்டி மாவில் சிறுநீரை கலந்ததாக தெரிவித்தார். அவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரிக்கி்ன்றனர்.