sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாலத்தீவின் மனமாற்றமும் இந்தியாவின் பெருந்தன்மையும்

/

மாலத்தீவின் மனமாற்றமும் இந்தியாவின் பெருந்தன்மையும்

மாலத்தீவின் மனமாற்றமும் இந்தியாவின் பெருந்தன்மையும்

மாலத்தீவின் மனமாற்றமும் இந்தியாவின் பெருந்தன்மையும்

9


ADDED : ஜூலை 29, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 04:29 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வார மாலத்தீவு பயணம், அந்த நாட்டின் சமகால வரலாற்றில் சில புதிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. மாலத்தீவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு வெளிநாட்டு தலைவர்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. அந்த மரியாதை முதல் முறையாக நம் பிரதமருக்கு அளிக்கப்பட்டது.

மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு பதவியேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்நாட்டிற்கு முய்சுவின் அழைப்பின் பேரில் பயணம் செய்த முதல் தலைவர் மோடியே ஆவார்.

பிரதமரின் வருகையை மாலத்தீவு அரசு விழா போல் கொண்டாடியது. தலைநகர் மாலே விமானநிலையத்தில் நேரடியாக வந்து பிரதமரை வரவேற்றதாகட்டும், பின்னர் நடந்த அதிகாரப்பூர்வ வரவேற்பில் அளித்த 21 -குண்டு மரியாதை ஆகட்டும், அதிபர் முய்சுவின் அரசு இந்திய விருந்தினருக்கு எந்தவொரு குறையும் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கருத்தாக இருந்தது.

தன் மாலத்தீவு பயணத்தின் போது, பிரதமர் மோடி அந்த நாட்டிற்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பு உதவிகளை அறிவித்தார். இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட 4,000 வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

ஆரவார வரவேற்பு


கடந்த ஆண்டுகளில் இந்திய உதவியுடன் நிறைவேற்றப்பட்ட பல்வேறு கட்டமைப்புகளையும் துவக்கி வைத்தார். இவை தவிர, இரண்டு நாடுகளும் எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

அதில், இரு நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை துவக்குவதற்கான ஒப்பந்தமும் அடங்கும்.

முய்சு அரசால் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் சீனாவுடன் தடையில்லா வர்த்தகம் செயல்படுத்தப்பட்டது. இது மாலத்தீவிற்கு அதீத அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதை தொடர்ந்தே இந்தியா இந்த முன்னெடுப்பை செய்துள்ளது.

இந்த பயணத்தில் பிரதமருடன் நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்நிலை குழுவும் சென்றிருந்தது.

அந்த நாட்டின் தலைநகரில் மோடி தங்கியிருந்த இரு நாட்களிலும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு அவரை வரவேற்றனர்.

சமூக வலைதள பதிவுகளை வைத்து பார்க்கும்போது, அவர்கள் தங்கள் தலைவரை அந்த அளவிற்கு நம்பவில்லை என்ற எண்ணமே தோன்றியது.

இந்தியாவின் உதவியுடன், பிரதமர் மோடியின் ஆசியுடன் மட்டுமே தங்களது நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை சீர்படும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

அரசியல் முதிர்வின்மை


சர்வதேச அரசியல் குறித்த ஆழ்ந்த அறிவு இல்லாத முய்சு, தான் பதவியேற்ற முதல் சில மாதங்களில் நம் நாட்டை குறித்து தெரிவித்த கருத்துக்கள் மற்றும் எடுத்த முடிவுகள் எல்லாம், அவரது வன்மத்தையே காட்டியன.

பதவியேற்ற சில வாரங்களில் இந்தியா எதிர்ப்பு நாடுகளான துருக்கி மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட முய்சு, பீஜிங்கில் இருந்து திரும்பி வந்த கையோடு, இந்தியாவை மட்டுமே நம்பி தன் நாடு இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தார்.

சரக்கு கட்டண உயர்வு, செங்கடலில் ஹவுதி படையினரின் தாக்குதல் போன்றவற்றால் அது பகல் கனவானது. எனவே, இன்றளவும் மாலத்தீவுக்கான பெரும்பாலான உணவு பொருட்கள் நம் துாத்துகுடி துறைமுகத்தில் இருந்து தான் அனுப்பப்படுகின்றன.

இது ஒரு புறமிருக்க, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, முய்சுவின் அரசு, தன் நாட்டின் பொருளாதார பிரச்னையை எதிர்கொள்ள சீனா உதவும் என்ற தவறான நம்பிக்கையில் அவசியமே இல்லாமல் இந்தியாவை குறை கூறினார்.

அண்டை நாடான இலங்கையின் பொருளாதார பிரச்னையில் சீனாவின் இரட்டை வேடம் கலைந்த பிறகும் முய்சு பாடம் கற்கவில்லை. இலங்கைக்கும் இந்தியா தான் தொடர்ந்து பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. இவற்றின் காரணமாகவும் முய்சு தற்போது மனம் மாறி உள்ளார்.

தவறான கருத்து


பிரதமர் மோடியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இந்தியா ஒரு 'ஆதரவான, நம்பிக்கைக்குரிய நாடு' என்று புகழாரம் சூட்டினார். இந்திய அரசு மாலத்தீவிற்கு மனிதாபிமானமாக பரிசளித்த மூன்று விமானங்களை சிவில் விமானிகள் மூலம் செயல்படுத்தும் ஒப்பந்தத்தையும் நீட்டித்துள்ளார்.

முய்சு கடந்த 2023 தேர்தலில், 'இந்தியா வெளியேறு' என்ற முன்னாள் அதிபர் அப்துல்லா யாமினின் கோஷத்தின் அடிப்படையிலேயே வெற்றிபெற்று அதிபரனார் என்ற கருத்தும் தவறானது.

மாறாக, அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் சோலிஹின் அரசின் செயல்பாடு மற்றும் ஆளுங் கட்சியின் உள்குத்துகள் ஆகியவற்றின் காரணமாகவே முய்சு வெற்றிபெற்றார்.

இருப்பினும் பதவியேற்ற பின், முய்சு இந்தியாவிற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தார். அந்த நிலையில் இருந்து தற்போது முழுதுமாக மாறி, இந்தியா மட்டுமே தன் நாட்டின் நம்பிக்கைக்குரிய நண்பன் என்ற முடிவை அவர் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

-என்.சத்திய மூர்த்தி

சர்வதேச அரசியல் ஆய்வாளர்






      Dinamalar
      Follow us