ADDED : ஜன 25, 2024 04:28 AM
மைசூரு : தாய், தங்கையை ஏரியில் தள்ளிக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மைசூரு ஹுன்சூரின் மரூர் கிராமத்தில் வசிப்பவர் சதீஷ், 48. இவரது மனைவி அனிதா, 40. தம்பதிக்கு நிதின், 22, என்ற மகனும், தனுஸ்ரீ, 19, என்ற மகளும் இருந்தனர்.
தனுஸ்ரீ, ஹனகோடு கிராமத்தில் வசிக்கும், வேறு ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்தார். இது நிதினுக்கு பிடிக்கவில்லை. தங்கையை கண்டித்தார். இதே காரணத்தால் அண்ணன், தங்கை இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
அவ்வப்போது இருவரும் சண்டை போட்டனர். இவர்களை பெற்றோர் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் ஹெம்மிகே கிராமத்தில் உள்ள, மாமா வீட்டுக்குச் செல்லலாம் என கூறி, நிதின் தாயையும், தங்கையையும் பைக்கில் அழைத்துக்கொண்டு, நேற்று முன் தினம் மாலை புறப்பட்டார்.
மூருர் ஏரி அருகில் பைக்கை நிறுத்தினார். தங்கையை ஏரியில் தள்ளினார். மகளை காப்பாற்ற வந்த தாயையும் தள்ளிவிட்டார். அதன்பின் பச்சாதாபம் ஏற்பட்டு, தாயை காப்பாற்ற ஏரியில் குதித்தார். ஆனால் தாயும், தங்கையும் இறந்துவிட்டனர்.
ஈர உடையுடன் வீடு திரும்பிய நிதின், நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறினார். அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், நிதினை கைது செய்தனர். தீயணைப்புப் படையினர் உதவியுடன், ஏரியில் இருந்து தாய், மகளின் உடல்களை மீட்டனர்.
ஹுன்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.