அர்த்தம் மாறியது அரசியல்: ஆதங்கப்படுகிறார் கட்கரி!
அர்த்தம் மாறியது அரசியல்: ஆதங்கப்படுகிறார் கட்கரி!
UPDATED : செப் 27, 2024 10:36 PM
ADDED : செப் 27, 2024 07:05 PM

அவுரங்காபாத்: ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றால் அதிகார அரசியல் என அர்த்தமே மாறி விட்டது,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனைப்பட்டார்.
மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகரில் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவு பகடேவுக்கு நடந்த பாராட்டு விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது: முன்பெல்லாம் அரசியல் என்றால், சமூக சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றாலே அதிகார அரசியல் தான் என அர்த்தமாகி விட்டது.
ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றிய போது பல தடைகளை எதிர்கொண்டோம். அப்போது அங்கீகாரம் இருக்காது. எங்களது பேரணி மீது கற்களை வீசி தாக்குவர். அவசர நிலை காலத்திற்கு முன்பு நாங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்திய ஆட்டோ ரிக்சாவிற்கு தீவைத்தனர்.
தற்போது ஆயிரக்ணக்கான மக்கள் எங்களது பேச்சை கவனிக்கின்றனர். இந்த புகழுக்கு நான் மட்டும் காரணம் இல்லை. ஹரிபாவு போன்ற தொண்டர்கள் தான் காரணம். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கட்சியில் இருந்து எதுவும் கிடைக்காத நிலையிலும், நன்றாக உழைப்பவரே சிறந்த கட்சி தொண்டர். இவ்வாறு கட்கரி பேசினார்.

