காணாமல் போன நகை; சந்தான பாக்கியம் அருளும் கவுரம்மா
காணாமல் போன நகை; சந்தான பாக்கியம் அருளும் கவுரம்மா
ADDED : நவ 04, 2024 09:58 PM

- நமது நிருபர் -
ஒவ்வொரு கோவிலுக்கும், தனித்தனி மகத்துவம் இருக்கும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு தன்மை இருக்கும். அதேபோல் முட்டள்ளி கவுரம்மாவை வணங்கினால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே பெண்களுக்கு பிடித்தமான அம்மனாக விளங்குகிறார்.
உத்தரகன்னடா, சித்தாபுராவின் ஹளியாளா என்ற கிராமத்தில் ஜி.டி.நாயக் என்பவரின் வீட்டில் முட்டள்ளி கவுரம்மா கோவில் உள்ளது. 500 ஆண்டுகளாக, பாரம்பரியமாக இவரது குடும்பத்தினர், கவுரம்மாவை பூஜிக்கின்றனர். அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கும் அனுமதி உள்ளது. ஆண்டில் நான்கு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.
கேட்ட வரம்
விநாயகர் சதுர்த்தியின்போது, இவரது வீட்டில் கவுரம்மா சிலை அமர்த்தி வழிபடுவர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து, அம்மனை தரிசித்து அருள் பெறுவர். இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
கேட்ட வரம் கிடைக்கும். குறிப்பாக சந்தான பாக்கியத்தை அருள்பவர். திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதி, கவுரம்மாவை தரிசிக்கின்றனர். சிறிய தங்கம் அல்லது வெள்ளி தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.
நான்கு நாட்களும் தினமும் 5,000 முதல் 10,000 பேர் வருகின்றனர். கோவிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டியது இல்லை. எந்த சேவைக்கும் கட்டணமும் கிடையாது. இங்கு வழிபடும் அம்மன் விக்ரஹம், மரத்தால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் தங்க நகை தொலைந்து போனால், கவுரம்மாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் போதும்.
அந்த நகை கிடைத்துவிடும். பல நுாற்றாண்டுகளாக அம்மன் வழிபாடு நடக்கிறது. அரச குடும்பத்தினரும் கூட, இங்கு வந்து அம்மனை தரிசித்தனர்.
ஹளியாலா கிராமத்தில் பஸ் வசதி இல்லை. மழைக்காலத்தில் சொந்த வாகனத்திலும் வர முடியாது. எனவே 3.5 கி.மீ., நடந்து வருகின்றனர்.
கவுரம்மா விக்ரகம், நாயக் வம்சத்தினருக்கு, பீளகி அரசர் அன்பளிப்பாக வழங்கியது. அன்று முதல் இதை பூஜிக்கின்றனர்.