மாற்று கட்சிக்கு ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள்; ராஜ்யசபா தேர்தலில் பெரும் குழப்பம்
மாற்று கட்சிக்கு ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள்; ராஜ்யசபா தேர்தலில் பெரும் குழப்பம்
UPDATED : பிப் 28, 2024 04:09 AM
ADDED : பிப் 28, 2024 02:40 AM

புதுடில்லி: கட்சி மாறி ஓட்டளிப்பு, எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டு களுக்கு இடையே ராஜ்ய சபா எம்.பி., தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடந்த ஐந்து இடங்களில், பா.ஜ., இரண்டு, காங்கிரஸ் மூன்று இடங்களில் வென்றன.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடந்த 10 இடங்களில், பா.ஜ., எட்டிலும், சமாஜ்வாதி இரண்டிலும் வெற்றி பெற்றன.
ராஜ்யசபாவில் வரும் ஏப்., மாதத்தில் பதவிக் காலம் முடியும், 56 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நாடு முழுதும், 15 மாநிலங்களில் இதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.,வுக்கு சாதகம்
இதில், பா.ஜ., தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல் முருகன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உள்பட, 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாயினர்.
இந்நிலையில், 10 இடங்கள் உள்ள உத்தர பிரதேசம், நான்கு இடங்கள் உள்ள கர்நாடகா, ஒரு இடம் உள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் நேற்று தேர்தல் நடந்தது. துவக்கத்தில் இருந்தே இந்த மாநிலங்களில் குழப்பம் நிலவி வந்தது.
ஒரே ஒரு இடம் காலியாக உள்ள ஹிமாச்சலில், அரசியல் குழப்பம் உச்சகட்டத்துக்கு சென்றது. அங்கு பா.ஜ., சார்பில் ஹர்ஷ் மகாஜன், காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி போட்டியிட்டனர்.
மொத்தம், 68 உறுப்பினர்கள் உள்ள சட்டசபையில், காங்கிரசுக்கு, 40, பா.ஜ.,வுக்கு, 25 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மூன்று பேர் சுயேட்சைகள்.
நேற்று நடந்த தேர்தலில், இரு வேட்பாளர்களுக்கும், தலா, 34 ஓட்டுகள் பதிவாயின. இதில், எதிர்தரப்பு மற்றும் சுயேட்சை தரப்பில் ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு சாதகமாக ஓட்டளித்துள்ளனர்.
இருவரும் சமமான ஓட்டுகள் பெற்றதால், 'டாஸ்' போட்டதில், பா.ஜ., வேட்பாளர் வென்ற தாக அறிவிக்கப்பட்டது.
கடத்தல் குற்றச்சாட்டு
முன்னதாக, காங்கிரசைச் சேர்ந்த ஐந்து முதல் ஆறு எம்.எல்.ஏ.,க்களை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஹரியானா போலீசார் கடத்திச் சென்றதாக, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் பெரும்பான்மையாக இருந்தபோதும், இங்கு பா.ஜ., வேட்பாளர் வென்றுள்ளார்.
இதுபோலவே, கர்நாடகா விலும் பா.ஜ., வேட்பாளர் கட்சி மாறி ஓட்டளித்ததால், காங்கிரஸ் வேட்பாளர் வென்றார்.
இங்கு நான்கு இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் சார்பில் அஜய் மாகன், சி.ஜி. சந்திரசேகர், சையத் நாசர் ஹுசைன் ஆகியோர் போட்டியிட்டனர். பா.ஜ., சார்பில் நாராயண்சா பாந்தகே போட்டியிட்டார்.
இதற்கிடையே, பா.ஜ., வின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில், காங்கிரசின் மூன்று வேட்பாளர்கள் மற்றும் பா.ஜ.,வின் ஒரு வேட்பாளர் வென்றனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சோம்சேகர், காங்கிரசின் அஜய் மாகனுக்கு ஆதரவாக ஓட்டளித்தார். மற்றொரு எம்.எல்.ஏ., சிவராஜ் ஹெப்பர், ஓட்டளிக்காமல் புறக்கணித்தார்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 10 இடங்களுக்கு, பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த மாநிலத்தில், எம்.எல்.ஏ.,க்களின் பலத்தின் அடிப்படையில், பா.ஜ., ஏழு பேரையும், சமாஜ்வாதி மூன்று பேரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும் நிலை இருந்தது. இருப்பினும் பா.ஜ., கூடுதலாக சஞ்சய் சேத்தை வேட்பாளராக அறிவித்தது.
ஒருவர் தோல்வி
பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங், முன்னாள் எம்.பி., சவுத்ரி தேஜ்வீர் சிங் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். சமாஜ்வாதி சார்பில் நடிகை ஜெயா பச்சன் உள்ளிட்டோர் நிறுத்தப்பட்டனர்.
இதில் சமாஜ்வாதி கட்சியின் கொறடா உட்பட ஏழு எம்.எல்.ஏ.,க்களும், பகுஜன் சமாஜ் சார்பில் ஒரு எம்.எல்.ஏ.,வும் கட்சி மாறி, பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பா.ஜ., சார்பில் எட்டு பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சமாஜ்வாதி சார்பில் இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். ஒருவர் தோல்வி அடைந்தார்.

