பாரம்பரியத்தை எடுத்து காட்டுகிறது அருங்காட்சியக அதிகாரி பெருமிதம்
பாரம்பரியத்தை எடுத்து காட்டுகிறது அருங்காட்சியக அதிகாரி பெருமிதம்
ADDED : அக் 05, 2024 05:14 AM

மைசூரு: ''மைசூரு தசரா விழா, நம் பாரம்பரியத்தை, உலகம் முழுதும் எடுத்து காட்டுகிறது,'' என, தொல்லியல் அருங்காட்சியகம், பாரம்பரிய துறை ஆணையர் தேவராஜு தெரிவித்தார்.
மைசூரு தசரா விழாவை ஒட்டி, நேற்று தொல்லியல், பாரம்பரிய துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து டவுன் ஹால் முன் ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய ஜாவா மோட்டார் பைக் ஊர்வலத்தை தொல்லியல், பாரம்பரிய துறை ஆணையர் தேவராஜு துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
மைசூரு தசரா விழா, நம் பாரம்பரியத்தை, உலகம் முழுதும் காட்டுகிறது. மைசூருக்கு ஏராளமான பாரம்பரிய, கலாசார கருத்துகள் உள்ளன. நம் பாரம்பரியத்தை இன்றைய குழந்தைகளுக்கு தெரிவிப்பது நம் பொறுப்பு. தசரா கண்காட்சியில் 'பிராண்ட் மைசூரு' கடை உள்ளது.
அங்கு சிறப்பு பாரம்பரிய நினைவு சின்னங்கள், கட்டடங்களின் மாதிரிகள், உணவுப்பொருட்கள், மைசூரு சோப், மைசூரு பட்டு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை பொது மக்கள் பார்க்க வேண்டும்.
இன்றைய பாரம்பரிய கட்டடங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சைக்கிள் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் தாலுகா அளவில் பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரிய நினைவு சின்னங்களை அறிமுகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லுாரிகளிலும் 'ஹெரிடேஜ் கிளப்' துவக்கப்பட்டு உள்ளது.
மரபு என்பது நாம் வளர்ந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டவுன் ஹாலில் இருந்து புறப்பட்ட பைக் ஊர்வலம், பெரிய மணிக்கூண்டு, சாமராஜ உடையார் வட்டம், கே.ஆர்., சதுக்கம், டி.பானுமையா கல்லுாரி எதிர் சாலை, சி.கே.டி.ஏ., அலுவலகம், லலித மஹால் சாலை, தெரேசியன் கல்லுாரி, வசந்த மஹால் சாலை, வழியாக கண்காட்சி வளாகத்தில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தை சென்றடைந்தது.
5_DMR_0001
தொல்லியல், பாரம்பரிய துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடத்திய பாரம்பரிய ஜாவா மோட்டார் பைக் ஊர்வலம்.