முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்
ADDED : அக் 24, 2024 12:55 AM
மும்பை, மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும், 38 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை, தேசியவாத காங்கிரஸ் நேற்று வெளியிட்டது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. நவ., 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்., முதற்கட்ட பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 38 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தற்போதுள்ள 26 எம்.எல்.ஏ.,க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார், பாராமதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதன் வாயிலாக மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் களமிறங்கும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசைச் சேர்ந்தவரும், அஜித் பவாரின் சகோதரரின் மகனுமான யுகேந்திர பவாரை எதிர்த்து, அவர் போட்டியிட உள்ளார்.
இதேபோல் யெவ்லா தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சஹன் பூஜ்பாலும், அம்பேகான் தொகுதியில் திலீப் வால்சே பாட்டீலும் களமிறங்குகின்றனர். சட்டசபை துணை சபாநாயகராக உள்ள ஜிர்வால், திண்டோரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி கூட்டணிக்கு அஜித் பவாருடன் காங்கிரசில் இருந்து தாவிய சட்டசபை உறுப்பினர்கள் சுல்பா கோட்கே, ஹிராமன் கோஸ்கர் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.