ADDED : பிப் 09, 2025 06:53 AM

பெலகாவி: ஜார்கிஹோளி குடும்பத்தில் இருந்து, அரசியலுக்கு அமைச்சர் சதீஷ் மகன் ராகுல் புதிய வரவாக வந்துள்ளார். கட்சியின் இளைஞர் அணியின் பொதுச் செயலர் வழங்கப்பட்டுள்ளது.
பெலகாவி அரசியலில் ஜார்கிஹோளி குடும்பம் கோலோச்சி வருகிறது. ரமேஷ், சதீஷ், பாலசந்திரா, லகன், பீம்ஷி என்று ஐந்து சகோதரர்கள் அரசியலில் இருந்தனர். இவர்களில் பீம்ஷி, தற்போது தீவிர அரசியலில் இல்லை.
ரமேஷ், பாலசந்திரா பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களாகவும், சதீஷ் காங்கிரஸ் அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் உள்ளனர். லகன் சுயேச்சை எம்.எல்.சி.,யாக உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சதீஷ் மகள் பிரியங்கா வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
இந்நிலையில் ஜார்கிஹோளி குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் ராகுல், 25. சதீஷ் ஜார்கிஹோளியின் மகன். கர்நாடக காங்கிரஸ் இளைஞர் அணியின் பொதுச்செயலர் பதவி, அவருக்கு கிடைத்துள்ளது.
இன்ஜினியரிங் பட்டதாரியான ராகுல், 2018, 2023 சட்டசபை தேர்தலில் தன் தந்தை சதீஷ் வெற்றிக்காக யம்கன்மரடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சகோதரி பிரியங்காவை வெற்றி பெற செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த ஆண்டு நடந்த ஷிகாவி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமதுகான் பதான் வெற்றிக்காக தன் ஆதரவாளர்களுடன் இணைந்து, ஷிகாவியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தார். இதன் விளைவாக அவருக்கு பதவி வழங்கப்பட்டுஉள்ளது.

