வெளிநாட்டு மோகம் என்ற புதிய நோய் : துணை ஜனாதிபதி கவலை
வெளிநாட்டு மோகம் என்ற புதிய நோய் : துணை ஜனாதிபதி கவலை
UPDATED : அக் 19, 2024 10:44 PM
ADDED : அக் 19, 2024 10:39 PM

புதுடில்லி: '' நமது குழந்தைகளிடம் வெளிநாட்டு மோகம் என்ற புதிய நோய் பரவி வருகிறது,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் கல்வி நிறுவன விழாவில் அவர் பேசியதாவது: குழந்தைகள் மத்தியில் புதிய நோய் ஒன்று பரவி வருகிறது. அது வெளிநாட்டு மோகம். உற்சாகமாக வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். அதன் மூலம் புதிய கனவை காண விரும்புகின்றனர். ஆனால், எந்த நாடு, எந்த கல்வி நிறுவனம் என்பது குறித்து ஆராய்வது கிடையாது.
நடப்பு 2024ம் ஆண்டு கணக்குப்படி 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், இந்தியாவில் படிக்கும்போது எவ்வளவு பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மாணவர்கள் வெளிநாடு செல்வதால், அன்னிய செலாவணியில் 6 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை நமது கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புக்கு செலவு செய்தால், நாம் எங்கு இருப்போம்? வெளிநாட்டு சூழ்நிலை குறித்து, மாணவர்கள் தெரிந்து கொள்வது என்பது கல்வி நிறுவனங்களின் கடமையாகும்.கல்வியை வணிகமயமாக்குவது, நமது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு துணை ஜனாதிபதிஜக்தீப் தன்கர் பேசினார்.

