sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

24ல் துவங்குகிறது புதிய லோக்சபா கூட்டத்தொடர்

/

24ல் துவங்குகிறது புதிய லோக்சபா கூட்டத்தொடர்

24ல் துவங்குகிறது புதிய லோக்சபா கூட்டத்தொடர்

24ல் துவங்குகிறது புதிய லோக்சபா கூட்டத்தொடர்

7


UPDATED : ஜூன் 13, 2024 10:56 AM

ADDED : ஜூன் 12, 2024 11:50 PM

Google News

UPDATED : ஜூன் 13, 2024 10:56 AM ADDED : ஜூன் 12, 2024 11:50 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பின், கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் நாற்காலிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.

இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., இருந்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கிய கூட்டணி கட்சிகளாக உள்ளன. இதைத் தவிர, மதச்சார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்., உள்ளிட்டவையும் கூட்டணியில் உள்ளன.

தனிப் பெரும் கட்சி


அமைச்சரவையில் அதிக இடம் மற்றும் முக்கிய துறைகளை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கோரிய நிலையில், தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில், பா.ஜ., அதிக அமைச்சர்களையும், முக்கிய துறைகளையும் தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில், 18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர், வரும் 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களில், எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளனர். இதில், 26ம் தேதி லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. புதிய லோக்சபாவின் முதல் கூட்டம் என்பதால், 27ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடக்கும். புதிய அமைச்சரவையை, ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார்.

இதுபோலவே, ராஜ்யசபாவின், 264வது கூட்டத் தொடர், 27ல் துவங்கி, ஜூலை 3ல் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளதால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பார்லிமென்ட் தொடர் குறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்டில் தரமான விவாதங்கள் நடக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அதனால், சபையை சுமுகமாக நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். ஆட்சியை, அரசை நடத்துவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் உத்தரவிட்டுள்ளனர். யார் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்ற உத்தரவையும் வழங்கியுள்ளனர். இதை அவர்கள் உணர்ந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். நாட்டை மோடி அரசு நடத்தும். பார்லிமென்டை ஆளும் தரப்பும், எதிர்க்கட்சி தரப்பும் இணைந்து வாதங்கள், விவாதங்கள் வாயிலாக நடத்த வேண்டும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், விவாதங்கள் நடத்தி, ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு ரிஜிஜு கூறினார்.

சபாநாயகர் பதவிக்கு குறி ஏன்?

கடந்த இரண்டு ஆட்சிகளின்போது, சபாநாயகரை தேர்வு செய்வதில், ஆளும் பா.ஜ.,வுக்கு பிரச்னையாக இல்லை. ஆனால், தற்போது, சபாநாயகர் பதவியை, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்க்கின்றன.இந்தப் பதவி மிகவும் முக்கியமானது. அதை எப்படியாவது பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என, இந்த கட்சிகளுக்கு, ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போன்றவை வலியுறுத்தியுள்ளன.சபாநாயகர் பதவி என்பது, லோக்சபாவை வழிநடத்தக் கூடியவர். அவர் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து, அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளித்து, சபையை சச்சரவுகள் இல்லாமல் நடத்த வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே சபாநாயகர் பதவியில் அமர வைக்கப்பட்டாலும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அனைத்துக் கட்சிக்குமானவராக அவர் இருப்பார், இருக்க வேண்டும்.கடந்த, 2008ல், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில், பிரதமர் மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டது. இதற்கு, கூட்டணி அரசில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகராக இருந்தார். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியில் இருந்து விலகும்படி, கட்சி அவரை வலியுறுத்தியது.
ஆனால், அரசின் முடிவு சரி என்று, கட்சியின் எதிர்ப்பை மீறி முடிவெடுத்தார்.சபாநாயகர் பதவிக்கென, தனிப்பட்ட தகுதிகள் குறித்து, அரசியலமைப்பு சட்டத்தில் எதுவும் இல்லை. ஆனால், லோக்சபாவை வழிநடத்தி செல்லும் அதிகாரம் அவருக்கு உள்ளது. யாரை பேச அழைப்பது, எந்தப் பிரச்னை குறித்து பேச அனுமதிப்பது, தகுதி நீக்கம் செய்வது, பேச்சுகளை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவது என, பல அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பிரச்னை தொடர்பாக, 2018ல், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆகியவை, மோடி தலைமையிலான பா.ஜ., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முயன்றன.
ஆனால் அதை ஏற்காமல், ஓட்டெடுப்புக்கு விடுக்காமல், சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.சமீபத்தில் மஹாராஷ்டிராவில், சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. இதனால், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், கட்சியில் பிளவு ஏற்பட்டது. கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரே தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஷிண்டே ஆதரவாளரான சபாநாயகர், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டார்.தெலுங்கு தேசத்தின் ஜி.எம்.சி., பாலயோகி, 1998ல், வாஜ்பாய் அரசில் லோக்சபா சபாநாயகராக, சந்திரபாபு நாயுடுவின் வலியுறுத்தலால் நியமிக்கப்பட்டார். கடந்த, 1999ல் வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, 269 ஓட்டுகளும், எதிர்க்கட்சிகளுக்கு, 269 ஓட்டுகளும் கிடைத்தன. அந்த நேரத்தில், ஒடிசாவின் முதல்வராக சில தினங்களுக்கு முன் பதவியேற்ற கிரிதர் கமாங்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க பாலயோகி அனுமதி அளித்தார்.
அதனால், வாஜ்பாய் அரசு, ஒரு ஓட்டில் கவிழ்ந்தது.இவ்வாறு சபையில் ஓட்டெடுப்பு நடத்துவது, நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றில் சபாநாயகரின் பங்கு முக்கியமானது. தற்போதைய சூழ்நிலையில், தங்கள் கட்சிகளை உடைக்க பா.ஜ., முயன்றால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் அதைத் தடுப்பதற்கு, தங்களுடைய ஆதரவாளர் சபாநாயகராக இருப்பது நல்லது என, சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் நினைக்கின்றனர்.அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது சபாநாயகர் பதவி. அதனால், இந்த முறை கடும் போட்டி, கூட்டணிக்குள்ளேயே நிலவுகிறது.








      Dinamalar
      Follow us