அடுத்த இலக்கு கிருஷ்ண ஜென்ம பூமி: சட்டசபையில் யோகி ஆதித்யநாத் உறுதி
அடுத்த இலக்கு கிருஷ்ண ஜென்ம பூமி: சட்டசபையில் யோகி ஆதித்யநாத் உறுதி
UPDATED : பிப் 09, 2024 10:44 AM
ADDED : பிப் 08, 2024 09:55 PM

லக்னோ: ''ராம ஜென்ம பூமியை மீட்டுவிட்டோம்; அடுத்தது கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பதே குறிக்கோள்'' என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உ.பி., சட்டசபை கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ''அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக கொண்டாட்டங்களை பார்த்து, நந்தி பகவான் பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார். ''அதன் பலனாக, இரவோடு இரவாக தடைகள் அகற்றப்பட்டன. அதே போல கிருஷ்ணர் இப்போது பிடிவாதம் பிடிக்கத் துவங்கிவிட்டார்,'' என்றார். சபையில் உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர்.
அவர் நந்தி என குறிப்பிட்டது, காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்தி விக்கிரகத்தை தான். காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி தான் ஞானவாபி வளாகம் உள்ளது. இங்குள்ள பாதாள அறையில் ஹிந்துக்கள் வழிபட நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி அளித்தது. அதைத்தான், நந்தியின் பிடிவாதம் என குறிப்பிட்டார்.
அயோத்தி ராம ஜென்ம பூமியை போலவே, மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தின் மீது, ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அங்கு, தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. எனவே, கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பதே அடுத்த இலக்கு என்பதை தான், முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் அவ்வாறு பேசினார்.

