sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இஸ்ரோ-நாசா கூட்டமைப்பில் உருவான 'நிசார்' செயற்கைக்கோள்; வரும் 30ம் தேதி விண்ணில் பாய்கிறது

/

இஸ்ரோ-நாசா கூட்டமைப்பில் உருவான 'நிசார்' செயற்கைக்கோள்; வரும் 30ம் தேதி விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ-நாசா கூட்டமைப்பில் உருவான 'நிசார்' செயற்கைக்கோள்; வரும் 30ம் தேதி விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ-நாசா கூட்டமைப்பில் உருவான 'நிசார்' செயற்கைக்கோள்; வரும் 30ம் தேதி விண்ணில் பாய்கிறது


UPDATED : ஜூலை 24, 2025 07:36 AM

ADDED : ஜூலை 24, 2025 01:16 AM

Google News

UPDATED : ஜூலை 24, 2025 07:36 AM ADDED : ஜூலை 24, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்ரோ - நாசா இணைந்து, 12,750 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள, 'நிசார்' செயற்கைக்கோள், வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைக்கவுள்ள இந்த செயற்கைக்கோள், பூமியை அங்குலம் அங்குலமாக துல்லியமாக படம்பிடித்து அனுப்பும்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து, உலகின் மிக விலையுயர்ந்த, 'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.

12 நாட்கள் இந்த செயற்கைக்கோள், 12 நாளுக்கு ஒரு முறை மொத்த பூமியையும் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து அனுப்பும்.

பூமியில் நிகழும் இயற்கை மாற்றங்களை ஆராய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். குறிப்பாக இயற்கை பேரிடர் சூழல்களை கையாள்வதற்கான ஆய்வுகளில், 'நிசார்' செயற்கைக்கோள் திட்டம் உதவிகரமாக இருக்கும்.

அதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம், பூகம்பங்கள், சுனாமி, எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவுகள், பனிப்பாறைகள் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் உன்னிப்பாக கண்காணிக்கும்.

இதற்காக, 'நிசார்' செயற்கைக்கோளில் எஸ்.ஏ.ஆர்., எனப்படும் 'சிந்தெடிக் அப்ரேச்சர் ரேடார்' என்கிற சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரேடாரின் உதவியுடன் நல்ல தெளிவுத்திறன் உடைய படங்களை எடுக்க முடியும்.

இந்த செயற்கைக்கோளில் நாசா சார்பில், எல் - பேண்ட் ரேடார், ஜி.பி.எஸ்., ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட, 'ஹார்ட் டிரைவ்' ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அதே போல் இஸ்ரோ சார்பில் 'எஸ்-பேண்ட் ரேடார்' பொருத்தப்பட்டுள்ளது.

தயார் நிலை 'நிசார்' செயற்கைக்கோளை கடந்த 2024ல் விண்ணில் ஏவ இரு நாடுகளும் திட்டமிட்டன. ஆனால், செயற்கைக்கோள் உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தப் பணி தள்ளிப் போனது.

தற்போது அனைத்தும் தயார் நிலையில் இருப்பதால் வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின், 'ஜிஎஸ்எல்வி-எப்16' ராக்கெட் வாயிலாக, மாலை 5:40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

பூமியை தாழ்வாகச் சுற்றிவரும் வகையில் இந்த செயற்கைக்கோள் பூமியின் கீழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இது குறித்து பேசிய மத்திய விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங், ''இந்திய - அமெரிக்க கூட்டமைப்பில், 'நிசார்' திட்டம் புதிய உச்சத்தை தொடும். பூமியின் ஒவ்வொரு பகுதியையும் இந்த செயற்கைக்கோள் படம் பிடிக்கும்.

இதன் வாயிலாக புதிய புவி அறிவியல் கிடைக்கப் போகிறது. 'நிசார்' செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்கள் இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பகிரப்படும்.

வரலாற்று சாதனை இதன் மூலம் பேரிடர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ள முடியும். அந்த வகையில், இந்தியா உலக நாடுகளுக்கு உதவ வேண்டும் என்ற பிரதமர் மோடியின் 'விஸ்வ பந்து' கனவு நனவாகப் போகிறது,'' என்றார்.

மொத்தம், 12,750 கோடி ரூபாய் செலவில், 2,392 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதன் மூலம் இஸ்ரோ - நாசா புதிய வரலாற்று சாதனையை படைக்கப் போகின்றன.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us