'பயிற்சி தொழிலாளர்களின் எண்ணிக்கை வரம்பு நிபந்தனையுடன் அதிகரிக்கப்படும்'
'பயிற்சி தொழிலாளர்களின் எண்ணிக்கை வரம்பு நிபந்தனையுடன் அதிகரிக்கப்படும்'
ADDED : மே 12, 2026 06:36 AM

புதுடில்லி: தொழில் நிறுவனங்கள் தங்கள் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் வரை பயிற்சி தொழிலாளர்களை நியமித்து கொள்ள மத்திய அரசு விரைவில் அனுமதிக்க உள்ளதாக, திறன் மேம்பாட்டு துறை செயலர் தேபஸ்ரீ முகர்ஜி தெரிவித்துள்ளார். எனினும், பயிற்சி தொழிலாளர்களை குறைந்த சம்பளத்தில் மலிவாக பயன்படுத்துவதை தடுக்க இதற்கு சில முக்கிய நிபந்தனைகளும் விதிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
சி.ஐ.ஐ., தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆண்டு வணிக மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில் 15 சதவீத பயிற்சி தொழிலாளர்கள் என்ற உச்சவரம்பை எட்டிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த 25 சதவீத அனுமதி வழங்கப்படும்.
மேலும், பயிற்சி தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விட 30 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும். அத்துடன், பயிற்சி பெறும் குறைந்தது 35 சதவீதத்தினருக்காவது அந்த நிறுவனங்கள் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
தற்போதுள்ள விதிகளின்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் 2.50 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பயிற்சி தொழிலாளர்களை நியமிப்பது கட்டாயமாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அதிக அளவில் பயிற்சி தொழிலாளர்களை ஈடுபடுத்த, பெரிய நிறுவனங்கள் தங்களது துணை நிறுவனங்கள் வாயிலாக பணியமர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசுக்கு சொந்தமான 1,000 ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக 60,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள 'பி.எம்., சேது' திட்டத்தில், அரசுடன் தனியார் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறன் பயிற்சி வகுப்புகளை வடிவமைக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
