தேவ கவுடா பேரனுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம்!
தேவ கவுடா பேரனுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம்!
ADDED : ஏப் 29, 2024 06:44 AM

பெங்களூரு: கர்நாடகாவில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விசாரணைக்கு பயந்து, அவர் ஜெர்மனி தப்பியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த வழக்கு குறித்து, கர்நாடக அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு பிரஜ்வலின் சித்தப்பாவான குமாரசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, 91. இவரது மூத்த மகன் ரேவண்ணா, 66. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா, 33.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் வெற்றி பெற்றார். இந்த லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக ஹாசனில் போட்டியிட்டார். இந்த தொகுதிக்கு கடந்த 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
மன்னிக்க மாட்டோம்
இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணா சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால், வீடியோக்களில் பிரஜ்வல் முகம் தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில், உதவி கேட்டு சென்ற தங்களை பிரஜ்வல் தவறாக பயன்படுத்தி கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டுவதாகவும், சில பெண்கள் கன்னட சேனல்களுக்கு பேட்டி அளித்தனர்.
இதையடுத்து, பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். 'இது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்' என, நேற்று முன்தினம் மாநில அரசு அறிவித்தது.
இதன்படி, சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங், ஐ.பி.எஸ்., பெண் அதிகாரிகள் சுமன் பன்னேகர், சீமா லட்கர் தலைமையில் நேற்று சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதனால், இந்த விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை பெங்களூரில் இருந்து விமானம் வாயிலாக, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு பிரஜ்வல் சென்று விட்டார். விசாரணைக்கு பயந்து அவர் தப்பி சென்று விட்டதாக காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். பிரஜ்வலை கண்டித்து, பெங்களூரில் உள்ள மாநில டி.ஜி.பி., அலுவலக வளாகத்தில், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா அமர்நாத் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது.
பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவன் வளாகத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். பிரஜ்வல் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். அவரது உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கிடையில் ரேவண்ணாவும், பிரஜ்வலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர்கள் வீட்டு வேலைக்கார பெண் ஒருவர், ஹொளேநரசிபுரா போலீசில் நேற்று புகார் அளித்தார். புகாரின்படி ரேவண்ணா, பிரஜ்வல் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.
இது குறித்து, பிரஜ்வலின் சித்தப்பாவும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி அளித்த பேட்டி: பிரஜ்வல் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, முதல்வர் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உள்ளார். அவர்கள் விசாரணை நடத்தட்டும். உண்மை வெளி வரும். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவர். எக்காரணத்தை கொண்டும் தவறு செய்பவர்களை மன்னிக்க மாட்டோம். நானோ, தேவகவுடாவோ பெண்களை மிகுந்த மரியாதையுடன் தான் நடத்துவோம். பெண்களுக்கு எப்போதும் நாங்கள் மதிப்பு அளிப்போம்.
பிரஜ்வல் வெளிநாடு சென்றிருந்தால், அதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தப்பி சென்றிருந்தால், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கண்டுபிடித்து அழைத்து வரட்டும். அதற்காக தான் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
இதற்கிடையே, ஹாசன் 'சைபர் கிரைம்' போலீசில் கடந்த 23ம் தேதி, ம.ஜ.த.,வினர் ஒரு புகார் அளித்து உள்ளனர். அதில், 'பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெறுவதை தடுப்பதற்காக, அவரது உருவத்தை போலியாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். 'காங்கிரசின் நவீன் கவுடா என்பவர், இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

