ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மயிரிழையில் தப்பினார்
ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மயிரிழையில் தப்பினார்
ADDED : டிச 24, 2024 03:39 PM

கண்ணுார்:ரயில் வருவது தெரியாமல், தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் சிக்கி, காயமின்றி உயிர் தப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடியில், தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ நேற்று மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டது.
ரயில் வேகமாக சென்றுகொண்டிருக்க அதன் அடியில் ஒருவர் படுத்துக்கொண்டிருப்பதும், ரயில் கடந்து சென்ற பின்னர் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் சற்று தள்ளாடியபடியே தண்டவாளத்தை கடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. நல்லவேளையாக, அந்த நபருக்கு காயம் ஏதும் இல்லை என்பதையும் காண முடிந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வீடியோவில் ரயில் அடியில் படுத்துக்கிடந்த நபர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. கண்ணூர் பன்னென்பாறை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பது உறுதியாகி உள்ளது.
விபத்து குறித்து பவித்ரன் கூறுகையில், நான் மொபைல் போனை பார்த்துக்கொண்டே,தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, ரயில் வருவதைப் பார்த்தேன். என்னால் ஓட முடியவில்லை. அதனால் நான் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டேன். ரயில் கிளம்பியதும் நான் எழுந்து வந்துவிட்டேன்.
நான் பள்ளி வாகன கிளீனராக உள்ளேன்.அந்த சம்பவத்தின் போது, நான் மதுபானம் எதுவும் அருந்தவில்லை.அந்த வீடியோவை பார்த்ததும் உள்ளுக்குள் பயமாக இருந்தது.தான் தொடர்ந்து இவ்வழியே செல்வதாகவும், இதுதான் எனது முதல் அனுபவம்.
இவ்வாறு பவித்ரன் கூறினார்.