இளைஞர்கள் படையெடுத்த ஓவிய சந்தை கொண்டாட்டம் ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை
இளைஞர்கள் படையெடுத்த ஓவிய சந்தை கொண்டாட்டம் ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை
ADDED : ஜன 06, 2025 03:42 AM
கர்நாடகா சித்ரகலா பரிஷத் சார்பில், 'சித்ர சந்தே' எனும் ஓவிய சந்தை மிக பிரமாண்டமாக பெங்களூரு குமாரகிருபா ரோட்டில் நடந்தது. 22 ஆண்டுகளாக தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடக்கிறது. இந்திய அளவில் நடக்கும் பிரமாண்ட ஓவிய சந்தைகளில் முக்கியமானதாக ஓவியர்களால் கருதப்படுகிறது.
இதில், நாட்டின் 22 மாநிலங்களில் இருந்தும் ஓவியர்கள் பங்கு பெற்றனர். மாற்றுத்திறனாளிகள், சீனியர் ஓவியர்கள், இளம் ஓவியர்கள், ஓவியக்கல்லுாரி மாணவ - மாணவியர் என 1,500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக ஓவியர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
முப்பரிமாணம், ஆயில், அக்ராலிக், வாட்டர் கலர், டிஜிட்டல், அப்ஸ்டிராக்ட், ரியாலிஸ்டிக், தஞ்சாவூர் ஓவியம், தமிழர் பாரம்பரியம், கர்நாடகா பாரம்பரியம் குறித்த ஓவியங்கள் என ஆயிரக்கணக்கில் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஓவியங்களின் விலை 100 முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் விற்கப்பட்டன. ஓவியங்களை ரசிக்க கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கு மேல் மக்கள் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். குழந்தைகள் மொபைல் போனை மறந்து வேடிக்கை பார்த்தபடியே, அம்மாவின் கை பிடித்து நடந்து வந்தனர். இதனால் குமாரகிருபா ரோடே கோலாகலமாக காட்சி அளித்தது.
2 கி.மீ., துாரம்
இரண்டு கி.மீ., துாரத்துக்கு ஓவியங்கள் அணிவகுத்தன. இதனால் முதல்வரின் அலுவலக இல்லமான 'கிருஷ்ணா' இல்லம் மறைந்து காணப்பட்டது. இதுமட்டுமின்றி புத்தகங்கள், உணவு வகைகள், சிறிய அளவிலான மத்தளம் போன்ற இசை உபகரணங்களும் விற்கப்பட்டன.
ஓவியச்சந்தை என்றதும் வயதானவர்கள் தான் வருவர் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கும் வகையில், இளைஞர்கள் அலைமோதினர்.
இளைஞர்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு அவர்கள் அளித்த பதில் பாராட்டதக்கதாக அமைந்தது. 'இளைஞர்கள் என்றால் குடித்துவிட்டு பைக்கில் வேகமாக செல்பவர்கள் அல்ல. நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலம். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மட்டும் கலந்து கொள்வோம் என எண்ண வேண்டாம். மாறாக கலை, கலாசாரம் போன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வோம்' என உரக்க கூறியது பெருமையாக இருந்தது.
ஓவியங்கள் எப்படி?
பல வகையான ஓவியங்களால் சாலையின் இருபுறமும் வண்ணமயமாக காட்சி அளித்தது. ஓவியங்களை ரசித்துக் கொண்டே நடந்த சிலர், தடுமாறி தரையிலும் விழுந்தனர். ரியாலிஸ்டிக் ஓவியம் என சொல்லக்கூடியவை, மனிதரை நேரில் இருப்பது போல் இருந்தது. இது நிஜமா, படமா? என மாயவித்தை காட்டின.
தமிழக ஓவியங்கள்
தமிழகம் சார்ந்த கிராமப்புற ஓவியங்கள் எல்லாம் அருமையாக இருந்தன. ஓவியத்தில் இத்தனை வகைகளா என மலைப்பை ஏற்படுத்தியது.
உடனடி ஓவியம்
ஒருவர் உருவத்தை உடனடியாக ஓவியமாக வரைந்து கொடுப்பவர்கள் ஏராளமாக இருந்தனர். 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை பணம் கொடுத்தால் போதும், வெறும் 30 நிமிடத்தில் உங்கள் முகம் ஓவியமாக வந்து நின்றது.
டாட்டூ க்கள்
முகத்தில் வரையக்கூடிய டாட்டூ க்களும் போடப்பட்டன. பெண்கள் தங்களது முகத்தில் டாட் டூக்களை போட்டு மகிழ்ந்தனர். சிறுவர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
பொது மக்கள் தாங்கள் வாங்கிய ஓவியங்களை, சிரமப்பட்டு துாக்கி சென்றனர். சிலர், தங்கள் தலையில் வைத்து எடுத்து சென்றனர்.
தமிழ் பாடல்கள்
ஓவிய கல்லுாரி மாணவ - மாணவியர் ஆட்டம், பாட்டம் என தங்களது திறமையை வெளிப்படுத்தினர். கன்னட பாடல்கள் மட்டுமின்றி தமிழ் பாடல்களுக்கும் நடனம் ஆடி அசத்தினர்.
7:00 மணி
மாலை 6:00 மணி ஆகியதும், கடைகளை மூட சொல்லி, போலீசார் அறிவுறுத்தியும், பொது மக்கள் ஓவியங்களை வாங்க ஆர்வம் காட்டியதால் இரவு 7:00 மணி வரை சந்தை நடந்தது.
துண்டிப்பு
ஓவிய சந்தையால் குமாரகிருபா ரோட்டில் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மொத்தத்தில் இது கண்காட்சி இல்லை... கண் கொள்ளா காட்சியாக இருந்தது
- நமது நிருபர் -.