ADDED : டிச 03, 2024 07:40 AM

பெங்களூரில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்கள் அமைந்து உள்ளன. இதில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று, கவிபுரம் குட்டஹள்ளி கெம்பாம்புதி ஏரி அருகில் உள்ள மலை மீது அமைந்துள்ள பண்டே மஹாகாளி கோவில். 'பாண்டி மஹாகாளம்மா' என்றும் அழைக்கின்றனர். அம்மனை தரிசனம் செய்ய மலை ஏறி செல்ல வேண்டும்.
பொதுவாக மஹாகாளி உக்ரமான குணம் கொண்டவளாக, காட்சி அளிப்பார். ஆனால், இக்கோவிலில், மஹாகாளி தேவி, நான்கு கரங்களுடன் சாந்தமான வடிவில் அருள்பாலிக்கிறார்.
ஒரே கல்லில்
அம்மன் ஒரே கல்லில் 3 அடி உயரத்தில் செதுக்கப்பட்டு உள்ளது. அம்மனின் சிலையை பார்க்க இரண்டு கண்களும் போதாது. பெங்களூரு நகரை கெம்பேகவுடா உருவாக்குவதற்கு முன்பிருந்தே, இக்கோவில் இங்குள்ளது. கோவிலில் உள்ள பாறையில் அம்மன் இருப்பது ஆரம்பத்தில் யாருக்கும் தெரியவில்லை.
நஞ்சம்மா என்பவர் 1509ல், இந்த இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது, திடீரென சலசலப்பு சத்தம் கேட்டது. பயந்த குரலில் 'யாரது' என்று கேட்டபோது, 'நான் மஹாகாளி; எனக்கு பூஜை கைங்கர்யம் செய்ய வேண்டும்' என் அசரிரீ கேட்டது.
அதிசயம்
குழந்தைகள் விளையாடுகின்றனர் என்று நினைத்தார். பின், மீண்டும் அதே குரல் கேட்டது. உடனடியாக கிராமத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் குரல் வந்த இடத்தில் தேடிய போது, 3 அடி உயர பாறையில், மஹாகாளி அம்மனின் வடிவத்தை கண்டு அதிசயத்தனர். அன்று முதல் அம்மனை வழிபட துவங்கினர்.
பரமசக்தியின் தேவியான இவர், பக்தர்களின் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளித்து வருகிறார். முக்கியமாக மந்திரம், வசீகரம், பார்வை குறைபாடுகள் குணம் அடையும்.
பவுர்ணமி, அமாவாசை நாளன்று சிறப்பு வழிபாடுகள் உண்டு. தொழில், வியாபாரம், திருமணம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோருக்கும் நிவாரணம் கிடைக்கிறது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். அன்றைய தினம் அதிகளவில் கூடும் பெண்கள் லலிதா சஹஸ்ரநாமம் படிப்பர்.
பாதம் தொட்டு
அதிகாலையில் நடக்கும் அபிஷே கத்தின் போது, பக்தர்கள் கருவறைக்குள் சென்று அம்மனின் பாதங்களை தொட்டு வணங்கலாம். தினமும் காலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை அம்மனை தரிசிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 99007 81554 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -