ADDED : அக் 05, 2024 05:15 AM

மைசூரு: மைசூரு தசரா கொண்டாட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகம் தயாராகிறது. ஜம்பு சவாரிக்கு யானைகளும் ஒத்திகை பார்க்கின்றன. மஹாராஜாக்கள் ஆட்சிக் காலத்தில் மைசூரு தசராவுக்கு, தனி சிறப்பு இருந்தது.
மைசூரு தசரா உலக பிரசித்தி பெற்றது. பல நுாற்றாண்டுகள் வரலாறு கொண்டது. இப்போதும் அதே மெருகுடன் திகழ்கிறது. அன்று மன்னராட்சி இருந்தது. தசரா நேரத்தில் யானை மீது அம்பாரியில் மன்னரும் அமர்ந்து ஜம்பு சவாரியில் பங்கேற்பார்.
சம்பிரதாயம்
அரண்மனைக்கு சென்று மன்னரை பார்க்க முடியாத பிரஜைகள், ராஜ வீதியில் அமர்ந்தும், நின்றும் தசரா ஜம்பு சவாரியில் யானை மீது அமர்ந்து வரும் மன்னரை நேரில் பார்த்து ஆனந்தப்படுவர்.
மன்னர் காலத்தில் துவங்கிய தசரா, இன்றைக்கும் நடக்கிறது. காலப்போக்கில் சில நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்திருந்தாலும், சம்பிரதாயம், பாரம்பரியம் மாறவில்லை. மைசூரு சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ஜெய சாமராஜ உடையார், தசராவுக்கு என்றே தங்க ஜரிகை இழைத்த பளபளவென ஜொலிக்கும் உடை அணிந்திருந்தார். இந்த உடையில் யானை மீதுள்ள அம்பாரியில் அமர்ந்து வருவார்.
மதியத்துக்கு பின் நிர்ணயித்த சுப முகூர்த்தத்தில், ஜம்பு சவாரி ஆரம்பமாகும். அப்போது 21 முறை பீரங்கிகள் முழங்கும். மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, ஊர்வலம் துவங்கும். மன்னரை சுற்றிலும் மெய்க்காவலர்கள், குதிரைப்படை, அதிகாரிகள் செல்வர்.
தங்க அம்பாரியை சுமந்தபடி, பட்டத்து யானை கம்பீரமாக நடைபோடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஜம்பு சவாரி அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்டு, வடக்கு நுழைவு வாசல் வழியாக நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் சதுக்கம் வழியாக செல்லும். சாயாஜிராவ் சாலைக்கு வந்து பன்னி மண்டபத்தை அடையும். அதற்கு முன் வடக்கு நுழைவு வாசலை கடந்து வரும்போது, மன்னருக்கு மாலை, மரியாதைகள் நடத்தப்படும்.
டார்ச் லைட்
பன்னி மண்டபத்தை அடைந்த பின், வன்னி மரத்துக்கு பூஜை செய்யப்படும். அதன்பின் மஹாராஜா குதிரை மீது அமர்ந்து, டார்ச் லைட் அணிவகுப்பில் பங்கேற்கும் குதிரைப்படை, காலாட்படை உட்பட பல்வேறு படைகளின் கவுரவத்தை ஏற்பார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்து, இரவு 9:30 மணிக்கு மன்னர் அரண்மனைக்கு திரும்புவார்.
தசராவின் பத்து நாட்களும், மைசூரு விழாக்கோலம் பூணும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மக்கள் வருகை தருவர். பாடகர்கள், கிராமிய கலைஞர்கள், வாத்திய கோஷ்டி, பொம்மலாட்ட கலைஞர்கள், ஜோதிடர்கள், குறி சொல்வோர் உட்பட லட்சக்கணக்கானோர் மைசூருக்கு வருகை தருவர்.
கிராமங்களில் இருந்து, தசராவை பார்க்க வருவோர் தங்குவதற்கு, சத்திரங்களில் வசதி செய்யப்படும். இங்கு தங்கும் மக்கள், தசரா நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து, விருப்பமான பொருட்களை வாங்கிக் கொண்டு, தங்களின் ஊர்களுக்கு திரும்புவர். பலருக்கும் மன்னரை காண்பதே வாழ்நாள் கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, அவர்கள் முகத்தில் தென்படும்.
விடுதிகள் 'புல்'
இம்முறையும் லட்சக்கணக்கான மக்கள், தசராவை பார்க்க மைசூருக்கு வந்து உள்ளனர்; இனியும் வருவர். நகரின் அனைத்து ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சொகுசு விடுதிகள் நிரம்பியுள்ளன.